கடையடைப்பும் எமது கடமையும்!

தமிழர் தாயகத்தில் குறிப்பாக வட மாகாணத்தில் கடையடைப்பு போராட்டம் என்பது மாதாந்த விடுமுறை போன்று அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது.

அந்த வரிசையில் நாளையும் வட மாகாணம் தழுவியதாக பூரண கடையடைப்பு நடைபெற உள்ளது.

தமிழர்களாகிய எமக்கு இருக்கும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமா…? அப்படி இருந்தும் எமக்கு வாய்த்த தலைவர்கள் எங்களுக்கான தலைவர்களாக இல்லையே….! அப்படியானால் மக்களாகிய நாங்கள் தானே வீதியில் இறங்கியாக வேண்டும்.

நிற்க… இந்த கடையடைப்பு தேவையா…? அதனால் என்ன பிரியோசனம்…? இதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமோ…? இவ்வாறு வியாக்கின வேதமோத பலர் வரிசைகட்டி வருவார்கள்.

வாருங்கள் உங்களை வருக.. வருக… என வரவேற்கின்றோம்…

ஆயுதப் போராட்டம் நடந்தபோது வேண்டாத வேலையென்றும்… முதலமைச்சர் பதவியை தாறனெண்ட போது வாங்கியிருக்க வேணும்… பின் அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உரிமைகளை பெற்றிருக்கலாம் என்றவர்களே வருக.. வருக…

முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் அரங்கேறிய நிலையில் ஈவு இரக்கமே இல்லாமல் போராட்டம் போராட்டம் என்று தாங்களும் அழிஞ்சது போதாதென்று சனத்தையும் அழிச்சுப் போட்டாங்கள் என்று நரம்பில்லா நாக்கால விசமத்தனம் கதைத்தவர்களே வருக.. வருக…

வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் அறிவிச்சாங்கள்… பலவீனமானதாக இருந்தாலும் அதில தமிழர் நிலத்தில் தமிழர் கையில் ஆட்சி வரவேண்டும் என்ற போது அதிகாரமே இல்லாத மாகாணசபை எதற்கு என்று குதர்க்கம் பேசியவர்களே வருக.. வருக…

கிடைத்த ஆட்சியில் இருந்துகொண்டு உரிமைகளுக்காக குரல் கொடுத்த போது மாரித்தவளை போன்று கத்திவிட்டு போகவேண்டியதுதான்.. உப்பிடி எதுக்கெடுத்தாலும் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தால் கிடைக்கிறதும் கிடைக்காமல் போயிடும் என்று பேசியவர்களே வருக.. வருக…

ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, கடையடைப்பு போன்ற சனநாயக வழிமுறைகளில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்.. முப்படை கொண்டு போராடிய போதே சாதிக்க முடியாததை இவற்றால் எப்படி சாதிக்க முடியுமென்று வக்கணையாகப் பேசியவர்களே வருக.. வருக…

விதண்டாவாதம் பேசியே வயிறு வளர்ப்போரே வருக.. வருக… வந்து ஓரமாக நிற்க!

எங்களுக்கு கிடைத்தற்கரியதாக கிடைத்த அரும் பெரும் தலைமையை நந்திக்கடலோரத்தில் தொலைத்த பாவத்திற்கோ என்னவோ அலரிமாளிகையின் நிரந்தர அடிமைகளாகிவிட்டவர்களிடம் அகப்பட்டு தவியாய்த் தவிக்கின்றோம்.

உரிமைகளை பெற்றுத்தருவதாய் வாக்குறுதியளித்து வாக்கை சுவீகரித்தவர்கள் மானத்தை மறைக்க இருந்த கோமணத்தையும் அல்லாவா புடுங்கியெடுத்து அலரிமாளிகையில் தோரணமாக தொங்கவிட்டுள்ளார்கள்.

அப்படியே நாம் வாழாதிருந்தால் அடுத்த தலைமுறைகள் அநாதைகளாகிவிடும்.

வேறு வழியில்லை…
காலம் இட்ட கட்டளைப்படி எமக்கு முன் இருக்கும் சனநாயக வழியில் எமது உரிமைகளுக்காக நாம் போராடித்தான் ஆகவேண்டும்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் பாவத்தையும் சுமந்து சிறையிலிருக்கும் 132 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஒன்றுபட்ட மக்களாக எமது ஆதரவினை உலகிற்கு உணர்த்திட ஒரு நாளின் பகல் பொழுதை தியாகம் செய்வோம்.

முச்சந்திகளிலும் மூத்திரச்சந்துகளிலும் விதண்டாவதம் பேசுவோரே உங்களை கொடி பிடிக்க அழைக்கவும் இல்லை… கோசம் போட கூப்பிடவும் இல்லை… பேரணியாக நடந்து செல்ல வற்புறுத்தவும் இல்லை… கிடைத்த விடுமுறையில் எங்காவது ஒரு மூலையில் சுருண்டு கிடவுங்கள் அது போதும்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்