ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் – 43 ராணுவத்தினர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு படையினரும் போரில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட மைவான்ட் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் முதலில் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.

நேற்று தொடங்கி பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தின் பதில் தாக்குதலில் 10-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதே பகுதியில் உள்ள ராணுவ முகாமின் மீது கடந்த மே மாதம் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்