ஈழக் கவிஞனை கொண்டாடும் குர்திஸ்தானியர்கள்!

அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப் போராட்டு ஆதரவாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் ‘குர்து மலைகள்’ என்ற கவிதையை எழுதியிருந்தார்.

இந்தக் கவிதையை தமிழகத்தை சேர்ந்த லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். இந்தக் கவிதை குர்திஸ்தானை சேர்ந்த பலருக்கும் பிடித்துள்ளது. கவிதையினை வாசித்த குர்திஸ்தான் மக்கள் பலரும் தொடர்பு கொண்டு வருவதாக தீபச்செல்வன் குறிப்பிட்டார்.

குர்திஸ்தானிய போர்க்களத்திலிருந்து தொடர்பு கொண்ட நண்பர்கள் அக் கவிதையை குர்திஸ் மொழியில் மொழிபெயர்க்கப் போவதாகவும் கூறியுள்ளனர். குர்திஸ்தானிய போராட்டவாதிகளால் இயக்கப்படும் முகப்புத்தகம் ஒன்றிலும் இக் கவிதை பிரசுகரிக்கப்பட்டுள்ளது.

குர்து மலைகள் கவிதை குர்திஸ்தான் பெண்களுக்கு முற்றிலும் பொருத்தமானது என்றும் குர்திஸ்தான் தலைவர்களைக் காட்டிலும் சர்வதேச அறிவுஜீவிகள் குர்திஸ்தான் மக்களின் தியாகங்கள் பற்றியும் சுதந்திரம் பற்றியும் அக்கறையும் எழுச்சியும் கொண்டிருப்பதாக இக் கவிதை பற்றி குர்திஸ்தானியரான அரிப் கிலானி குறிப்பிட்டுள்ளார்.

இக் கவிதையை வாசித்த குர்திஸ்தானியரான படைப்பாளி அப்துல்லாஸ் ஓமர், குர்திஸ்தானில், குர்திஸ்தானிய மக்களுடன் வாழ்ந்த. குர்திஸ் போராட்டத்துடன் ஒன்றித்த ஒருவரால் மாத்திரமே இக் கவிதையை எழுத முடியும் என்று பதிவிட்டுள்ளார். அந்தளவுக்கு குர்திஸ்தானிய மக்களின் வாழ்வியலையும் போராட்டத்தையும் அந் நிலத்தின் குறியீடுகளுடன் இக் கவிதை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, குர்திஸ் மக்களின் எழுச்சியான போராட்டமும் எமது இனவிடுதலை குறித்த ஈடுபாடும் எமக்கு நம்பிக்கையையும் எம் தோள்களை இறுகப் பற்றும் உணர்வையும் தருபவை என்று கூறுகிறார் தீபச்செல்வன்.

இவர் எழுதிய ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை, ஆங்கிலம், டொச்சு, நோர்வேஜியன், பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக வசகர்களிடையே வரவேற்பு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குர்து மலைகள்

பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலிவ் மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல
தலைமுறை தோறும்
விடுதலை கனவை சுமந்து
சுதந்திரத்தை வென்ற
உம் இருதயங்களில் பூத்திருக்கும்
பிரிட்டில்லா மலர்களின் வாசனையை
நான் நுகர்கிறேன்.

குருதி ஊறிய
குர்து மலைகளே
உமது தேசம் போல்
எமது தேசமும் ஒர்நாள் விடியும்
எமது கைகளிலும் கொடி அசையும்
கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும்
எமது சுதந்திரத்தை அறிவிக்கும்
ஈழச் சிறுவரின் குரல்

லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல
எமது கொடியினை ஏந்தி
எம் கனவை உம் விழிகளிலும்
எம் தாகத்தை உம் இருதயத்திலும்
சுமந்த மலைகளே
இறுக்கமாகப் பற்றுகிறோம்
எம் நிலத்தின் விடுதலையை
எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை.

ஒரு போராளியின்
இறுதிப் பார்வைபோல
திடமானது நம் சுதந்திரம்
கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்
உமக்குத் தோழமை
நீரோ எமக்குத் தோழமை
குர்து மலைகளைப் போலவே
புனிதமானது நமது விடுதலை.

தீபச்செல்வன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்