முகமாலையில் தொடர்ந்தும் அபாயம்!

முகமாலைப் பகுதியில் வெடி பொருட்களை அகற்றி மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதற்கு, வெடி பொருட்கள் அகற்றுவது பாரிய சவாலாகவுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இது குறித்து இன்றைய தினம் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முகமாலைப் பகுதியில் வெடி பொருட்களை அகற்றி மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதற்கு வெடி பொருட்கள் பாரிய சவாலாக உள்ளது. கடந்த வருடத்தில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதும் கூட ஒரு சிறிய பகுதி விடுவிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியில் மக்கள் குடியேறுவதற்கு கிராம சேவையாளர் ஊடாக விபரங்களைச் சேகரித்தபோது, பத்து வரையான குடும்பங்களே மீள்குடியேறுவதற்கு தயாராகவுள்ளனர் என தெரியவருகின்றது. ஏனைய பகுதிகள் தொடர்பாக மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவற்றை அவர்கள் விரைவுபடுத்தித் தருவதாக கூறியுள்ளார்கள், அனைவருக்கும் முகமாலைப்பகுதி அதிகளவான வெடி பொருட்கள் உள்ள பகுதி என்பது தெரியும். எனவே விரைவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அப்பகுதியில் உள்ள வெடிபொருட்களை அகற்றுவது இயலாத விடயமாகவே காணப்படுகின்றது. அடுத்த கட்டமாக நாங்கள் இந்திராபுரத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்படும் என நம்புகின்றோம், அடுத்த வருடத்தில் அது சாத்தியப்படலாம் என நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்