ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சோனியா காந்திக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் வேண்டுகோள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கோபால் கோட்சேவை, மத்திய அரசு விடுவித்ததை கே.டி.தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோல் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க, சோனியா காந்தி ஒப்புதல் அளித்தால், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், தங்கள் வாழ்நாளில் நீண்ட காலத்தை சிறையில் கழித்துவிட்டதால், அவர்களுக்கு கருணை காட்டுங்கள் என்று, ராஜிவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர், என்ற முறையில் கேட்டுக்கொள்வதாகவும், நீதியரசர் கே.டி.தாமஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அற்புதம்மாள் நன்றி:

இதனிடையே, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி.தாமஸ் கருத்து தெரிவித்துள்ளதற்கு, பேரறிவாளினின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தங்களின் கோரிக்கையை ஏற்று, தனது மகனை சிறையில் இருந்து விடுவிக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அற்புதம்மாள் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்