பிரான்சில் உணர்வுகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பொண்டிப் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நிகழ்வில், பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் பொன்மலை அவர்கள் ஏற்றிவைக்க, மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 11.10.1996 அன்று கொக்குவில் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் மணிமகன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 27.11.1998 அன்று கோப்பாய்; பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.உயிரவன் அவர்களின் தாயார் அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றன.

மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர்மேடையில் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில், மாவீரர்கள் தமக்கென வாழாமல் தமது இனத்துக்காக வாழ்ந்து சாவடைந்தவர்கள். இவ்வாறு சாவடைந்த தேசப்புதல்வர்களை மதிப்பளிப்பு செய்வது சங்ககாலம், சேர சோழ பாண்டிய காலத்துக்கு அதாவது 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்து வந்துள்ளது.

மீண்டும் தமிழீழத்தில் குறித்த மதிப்பளிப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. சர்வதேசங்களிலும் இந்த நடைமுறை இராணுவத்தினருக்கு மட்டுமே உரியது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் எமது தேசப் புதல்வர்கள் அவ்வாறே சாவடைந்தார்கள். இரண்டரை இலட்சம் பேர்கொண்ட ஒரு வல்லமை அரசுடன் கால் பகுதி கொண்ட நாம் போரிடுவது என்பது எத்தனை தீரம் மிக்கவர்கள் என்பதைக் காட்டி நிற்கின்றது. அதற்குக் காரணம் எம் தேசத் தலைவன். மற்றொன்று எமது மக்கள்… என அவரது உரை தொடர்ந்தது.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் உணர்வுபொங்க கைகளைத் தட்டி நின்றனர்.
தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்