சிறிலங்காவின் புதிய அரசமைப்பு தனித்தமிழீழக் கொள்கையைப் புறந்தள்ளி, தமிழர்களின் உரிமையை வலியுறுத்துவதை தடை செய்கின்றது

‘தனித் தமிழீழக் கொள்கையைப் புறந்தள்ளி, தமிழர்களுடைய தனித்துவத்தை வலியுறுத்துவதையும் தடை செய்யும் நோக்கத்துடனேயே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசமைப்புக்கு ஆதரவு தேடி வருகின்றது. இது தொடர்பாக தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்’

இவ்வாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எமது மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை முற்றுமுழுதாக அழிப்பதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமை, தங்களுடைய மக்கள் தங்களை வெறுக்கின்றார்கள் என்று ஒப்புக்கொள்கின்ற அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கிறது என்றால் இலட்சக்கணக்கானவர்களுடைய தியாகங்கள் வீண் போகவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (18) மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்;

தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் மிகப் பெரிய பெரும்பான்மையான உறுப்பினர்கள் இளைஞர்கள். இந்த இளைஞர்கள் தான் இன்று எவ்விதமான விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் கடந்த 8 வருடங்களாக ஒரு கருத்துருவாக்கத்தை தங்களால் முடிந்தளவுக்கு செய்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்கள் தங்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றால் எங்கள் அமைப்பினுடைய இளைஞர்களின் மூத்த உறுப்பினர்களும் தான் காரணம்.

எங்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முயற்சியும் அந்த கொள்கை தெளிவும் எங்களுடைய அன்றாட வாழ்க்கையை எங்களால் சந்திக்கக்கூடிய எங்களுடைய மக்களுக்கு தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சியும் தான் இன்று பரவி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது.

இந்த மண்ணில் (வட்டுக்கோட்டை) நிறைவேற்றப்பட்ட அடிப்படைக் கொள்கைத் தீர்மானங்கள் எங்களுடைய சொந்த மக்களிடையே வாக்குகளினால் குழிபோட்டு புதைக்கின்ற அளவுக்கு இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியல் பின்னுக்கு போய் கொண்டிருக்கிறது.

எங்களுடைய அடையாளத்தை தக்க வைக்க வேண்டுமென்றால் நாங்கள் ஏதேவொரு வகையில் எங்களுடைய தேசிய உணர்வை உள்ளுர வைத்திருக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த போது எங்களுடைய மக்கள் மத்தியில் கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள் இருந்திருக்கலாம்.

பாரிய எதிர்பார்ப்புடன் இருந்த எமது மக்கள் அந்த எதிர்பார்ப்பு முற்றுமுழுதாக அழிக்கப்படுகின்ற பொழுது வெறுப்படைந்திருக்கலாம். அந்த வெறுப்பினால் எங்களுடைய அரசியல் அபிலாஷைகள் வெற்றியடையாத ஒரு இடத்துக்கு போய் சென்றுவிட்டது என்றதொரு முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம்.

ஆனால், எங்களுடைய உணர்வை உயிரோடு நாங்கள் வைத்திருப்போமானால் காலம் செல்லச் செல்ல எங்களுடைய மக்களுக்கு அவர்களுடைய ஏமாற்றங்கள் ஒருபுறம் கரையேறும் அந்த கொள்கை தெளிவு மீண்டும் வரும்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காக தலைமை தாங்குவோம் என்று அன்று நாங்கள் நினைக்கவில்லை. அன்று எங்களிடம் ஒரேயொரு குறிக்கோளாக இருந்தது தேசிய உணர்வை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்பது தான். அது, இன்று இந்த அலுவலகம் திறப்பு நிகழ்வின் போது அந்த நிலைமையிலிருந்து நாங்கள் மேலும் மேலும் முன்னேறியிருக்கின்றோம்.

அந்த உணர்வை முற்றுமுழுதாக அழிப்பதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமை தங்களுடைய மக்கள் தங்களை வெறுக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கின்ற அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றது என்றால் இலட்சக் கணக்கானவர்களுடைய தியாகங்கள் வீண் போகவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் எங்களுடைய அந்த சவால் இன்னும் தொடர்கின்றது. அந்த சவாலுடைய மிக முக்கியமான அங்கம் 2018 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது.

தமிழ்த் தேசிய உணர்வை முற்றுமுழுதாக அழித்து இலங்கையினுடைய சிங்கள பௌத்த தேசியவாதத்தை முற்றுமுழுதாக ஏற்று அந்த தேசியவாதத்துக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து அதை பாதுகாக்கின்ற வகையிலும் சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு சவால் விடுக்க முடியாத வகையிலும் தமிழர்கள், முஸ்லிம்கள் மலையகத்தவர்கள் போன்றோர் எந்தவொரு காலத்திலும் சிங்கள பௌத்த தேசிய வாதத்திற்கு ஒரு போட்டியாக இருக்கக்கூடிய நிலைமை வரக்கூடாது என்பதற்காகவும் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

நாங்கள் 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இந்த விடயங்களை எங்களுடைய மக்களுக்கு கூறிய பொழுது அது வெறும் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் அது இனிமேல் சந்தேகமாக இருக்க முடியாது.

தமிழ்த் தேசம் கலைபட்டு தமிழ்த் தேசிய உணர்வை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது.

அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்றால் இறைமை என்ற விடயம் தமிழர்களிடையே தனித்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் எந்தவொரு காலத்திலும் இந்த அங்கீகாரமும் பெறமாட்டாது என்ற வகையில் தான் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருந்தது.

பௌத்த சமயத்தை நாங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கின்ற வகையில் அரசியலமைப்பு தயாரிக்கப்படுகின்றது.

தனித் தமிழீழ தனிநாடு என்ற கோரிக்கையை ஒருபக்கம் விட்டுவிட்டு தமிழர்களுடைய தனித்துவத்தை வலியுறுத்துவதும் தடை செய்யப்பட்ட ஒரு விடயமாக கருதப்படக்கூடிய அளவுக்கு புதிய அரசியலமைப்பு எமக்கு எதிரான ஒரு விடயமாக எழுதப்பட்டிருக்கின்றது.

ஆனால், இந்த விடயங்களை கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் எமது மக்களுக்கு கூறி வந்திருந்தாலும் கூட இன்றைக்கு அதை நிரூபிக்கக்கூடிய வகையில் கண்ணுக்கு முன் ஒரு வரைபு வெளிவந்திருக்கின்ற நிலையிலும் கூட இந்த சதிக்கு முழுமையாக ஒத்துழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுடைய மக்களிடம் சென்று எங்களுடைய இனத்துக்கு, தேசத்துக்கு எங்களிடம் அடையாளத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகின்ற இந்த அரசியலமைப்புக்கு ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் தான் இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது. புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற செய்தியை கொடுக்கும் வகையில் நடைபெறப் போகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலை நாங்கள் பயன்படுத்தியாக வேண்டும்.

அந்த தேர்தலில் எங்களுடைய வேட்பாளர்களுடைய குறிக்கோள் ஒன்றாக இருக்க வேண்டும். எங்களுடைய முயற்சிகள் ஒரேயொரு விடயத்தை நோக்கித் தான் இருக்க வேண்டும்.

நடைபெற போகின்ற அரசியல் மோசடி தொடர்பான எங்களுடைய மக்களுக்கு விளக்கமளித்து அவர்கள் மத்தியில் விளிப்புணர்வை ஏற்படுத்தி காலப்போக்கில் வரக்கூடிய சர்வஜன வாக்கெடுப்பை நாங்கள் தோற்கடிப்பதற்குரிய சந்தர்ப்பமாக இந்தத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது ‘முயற்சி எடுப்பதை கைவிட்டு ஒதுங்கினால் தான் தோல்வியே தவிர, முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கும் வரைக்கும் நாங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம்’ என்று.

நாங்கள் முயற்சி எடுப்பதற்கு 2010 ஆம் ஆண்டு தொடங்கியிருந்தோம். ஆனால், இன்று அது வெறும் முயற்சியை தாண்டி தமிழ் அரசியலில் அந்த உரையாடலை தீர்மானிக்கின்ற சக்தியாக நாங்கள் மாறியிருக்கின்றோம். – என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்