தமிழர் மனநிலையை புரிந்து கொள்ளும் மட்டும் நல்லிணக்கம் என்பது இங்கு சாத்தியமில்லை! ஜெகதீஸ்வரன் டிஷாந்த்

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர் களம் பார்த்தவன், உண்ட சோறு தொண்டை உள் நுழையும் முன் நஞ்சை உண்டு தாய் மண் காத்தவன்“ என தமிழீழ மாவீரர்களின் தியாகத்தை இரு வரியில் உலகறியச் செய்துள்ளார் புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன். அந்த மானமாவீரர்களின் தியாகங்கள் காலத்தால் என்றும் அழிக்க முடியாதவை. அவர்களின் தடங்கள் தமிழ் மண் எங்கிலும் ஆழப்பதிந்திருக்கும்.

சிங்கள தேசம் முழுமையாக தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, அந்த மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஆளுகின்ற போதும் மாவீரர் நாளில் அந்த மண் எழுச்சி கொண்டே நிற்கின்றது.

சிங்கள ராணுவமும் வேறு வழி இன்றி ஒரு நிமிட அக வணக்கத்தில் ஓரமாக தலை சாய்த்து அமைதியாகச் செல்கின்றது.

என்றும் போல் இந்த ஆண்டும் தாய் நாடு எழுச்சியில் மிதக்கின்றது. என்றோ ஒரு நாள் தமிழீழம் விடியும் என்ற ஏக்கத்துடன். வடக்கில் மாவீரர் தினத்தையும்,தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடினர் .

மாவீரர் நாள் துக்க நாள் கிடையாது, அது தமிழ் மக்களின் எழுச்சி நாள். அந்த எழுச்சிமிகுந்த நாளுக்கு முன் எப்பெரும் படைகளை குவித்தாலும் அது ஒரு பொருட்டே கிடையாது அம் மக்களுக்கு. அவர்கள் சிந்தை முழுதும் தாம் பெற்ற பிள்ளைகளை தாங்கி நிக்கும் இந்நாளில்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மண் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட ஆரம்பித்த காலப்பகுதியில் சங்கர் (செ. சத்தியநாதன்) என்ற போராளி ஒரு மோதலில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்படுகின்றார். ஆனாலும் 1982-ஆம் ஆண்டு நவம்பர் 27ம் நாளில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றார்.

அவர் தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து முதல் பலியான மாவீரர். அன்றிலிருந்து தாய்நாட்டுக்காக வீரமரணத்தை தழுவிய அத்துணை மாவீரர்களையும் நினைவு கூறும் வகையில் 1989ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளினால் தமிழீழ மாவீரர் நாள் பிரகடனப்படுத்தப்பட்டு எழுச்சி நாளாக கொண்டாடப்படுகின்றது.

அன்றைய எழுச்சி நாளிலேயே தமிழீழ தேசியத்தலைவராக தமிழ் மக்களால் மதிப்பளிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார். அதுவே அவர் தமிழீழ விடுதலை சார்ந்தும் தமிழ் மக்களின் எண்ணங்கள் குறித்தும் உலகுக்கு எடுத்துரைப்பதோடு தேச விடுதலையை வலியுறுத்தி கோரிக்கைகளையும் வைக்கும் ஒரு முக்கியமான நாள். அவரது உரையை கேட்பதற்கு சிங்கள அரசு முதற்கொண்டு உலகமே விழித்திருக்கும்.

2009 ஆண்டு தமிழ் மக்கள் மீது உலக நாடுகளின் துணையுடன் ஒரு இனவழிப்புப் போரை சிங்கள அரசு நிகழ்த்திய பின், தமிழீழ விடுதலைப் போராட்டமும் மவுனிக்கப்பட்டது. தமிழ் மண்ணில் இருந்த அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களும் சிதைத்துப் புதைக்கப்பட்டது. அந்த கல்லறைகளை உடைத்து தமது படைக்கான அரண்களையும் ராணுவம் கட்டிக்கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு தமிழீழம் மீண்டும் எழுச்சி கொண்டது. சிதைத்துப் புதைக்கப்பட்ட தமது பிள்ளைகளின் கல்லறைக் கற்துண்டுகளை தேடி எடுத்து மீண்டும் கல்லறை பாசறைகள் அமைத்தனர்.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மக்கள் மாவீரர்களுக்கு வெளிப்படையாகவே ராணுவத்தின் அடக்கு முறைகளை வென்று தமது உறவுகளுக்கு துயிலும் இல்லங்களிலேயே விளக்கேற்றி விட்டனர்.

“மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை, முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!” என்ற தமிழீழ போர்ப்பறை கவிஞன் புதுவை ரத்தினத்துரையின் தீர்க்க தரிசன வரிகளோடு தம் பிள்ளைகளின் உறவுகளின் துயிலுமில்லங்கள் எங்கும் குழுமியிருந்தனர்

ராணுவ கட்டுப்பாட்டு தளங்கள் அமைந்துள்ள ஒருசில துயிலுமில்லங்கள் வீரவணக்க நிகழ்வுகளுக்காக அனுமதிக்கப்படவில்லை ,இருந்தும் யாழ் வலிகாமம் கோப்பாய் துயிலுமில்லம் ராணுவ தளம் அமைக்கப்பட்டிருப்பதால் வீதியில் குழுமிய பல்லாயிரக்கணக்கில் மக்கள் தம்பிள்ளைகளுக்கு வீதியிலேயே நினைந்துருகி சுடரேற்றி மனக்கண்ணில் வீரவணக்க நிகழ்வுகளை நடாத்தினர் , துயிலுமில்ல வாசலில் ராணுவ வண்டிகள் பாதையை அடைத்து விட்டு உறவுகள் உட்சென்று நிகழ்வுகளை நடாத்தி விடுவார்களோஎன்ற அச்ச்சத்தில் ராணுவத்தினர் இருந்தனர்

உண்மையில் தமிழர்களை அடக்கி ஆளும் நிலையையும் கைவிட்டு , யுத்த இழப்புக்களையும் தமிழர்களின் மன நிலையையும் சிங்கள தேசம் புரிந்து கொள்ளும் மட்டும் நல்லிணக்கம் என்பது இங்கு சாத்தியம் இல்லை என்பது கடந்த காலங்களும் -நிகழ்காலங்களும் தந்துவிட்டு சென்ற தந்து கொண்டிருக்கின்ற உண்மை

About இலக்கியன்

மறுமொழி இடவும்