வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முடிவு?

வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான வரதராஜ பெருமாள் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) அணியின் உறுப்பினராக இருப்பதுடன் அரசியலில் ஈடுபடுவதில்லை.

வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாணசபைத் தேர்தலில் வரதராஜ பெருமாள் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றார்.

எவ்வாறாயினும் கடந்த 1990ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதை அடுத்து அவர் இந்தியாவுக்கு சென்று இந்திய அரசின் அனுசரணையோடு அங்கு தங்கியிருந்தார்.

போருக்கு பின்னர் நாடு திரும்பிய பெருமாள், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பத்மநாபா அணியில் இணைந்து செயற்பட்டார்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரண்டாக பிளவுப்பட்டது.

அப்போது கட்சியின் செயலாளராக கடமையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியினருக்கு கட்சியின் உத்தியோகபூர்வ பெயர் உட்பட சட்டரீதியான உரிமைகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்