தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார் கிருஸ்ணபிள்ளை: சுயேட்சையாக செயற்படத் தீர்மானம்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ்க் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்னை நம்பியுள்ள மக்களை வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுயேச்சைக் குழுவாகுதல் அல்லது தனிப்பட்ட கட்சிகளோடு இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளேன்.

பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்து செயற்படும் எண்ணம் எனக்கில்லை. தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு 1965ஆம் ஆண்டிலிருந்து பாடுபட்ட நான் தொடர்ந்தும் பாடுபடுவேன்.

தமிழரசுக் கட்சிபோன்று நான் யாருடைய மனதையும் நோகடிக்காமல் அனைவரது அரவணைப்போடும் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக உழைப்பேன்.

தமிழ் மக்கள் கல்வி, கலாசாரம், பொருளாதாரம், பண்பாடு, பாரம்பரியம் என அனைத்து விடயங்களிலும் மேலோங்கி நிற்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தமிழ்த் தலைமைகள் பதவிக்காக அடிபட்டு மக்களை மேலும் மேலும் படுபாதாளத்தில் தள்ளாது அனைத்து துறைகளிலும் மக்களை முன்னேற்றுவதற்கு வழியேற்படுத்த வேண்டும்” என கிருஸ்ணபிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்