தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள்: கருணாகரம்!

அரசியல் ஞானம் பெற்ற தமிழ் மக்கள் தேர்தலை எதிர்காலத் தீர்வுடன் ஒப்பிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”உள்ளூராட்சி சபைகள் தொடர்பான பங்கீடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கும் டெலோவுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பாரிய வெற்றியைப்பெறும்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினான்காம் திகதி நான்கு சபைகளுக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்திருக்கின்றது.

ஏறாவூர்ப்பற்று, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று, மண்முனைப்பற்று ஆகிய நான்கு சபைகளுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ததுடன் நேற்றையதினம் காத்தான்குடி தவிர்ந்த ஏனைய மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு சபைகளுக்கான கட்டுப்பணத்தை நாங்கள் செலுத்தியிருக்கின்றோம்.

கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாக பல குழப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்குள் எந்தவிதமான குழப்பங்களும் இருக்கவில்லை. பல தடவைகள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மாறிமாறி நடைபெற்றன.

கருத்து முரண்பாடுகள் அனைத்தும் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் காரியாலயத்தில் நடந்த கூட்டத்தில் இறுதி முடிவு காணப்பட்டதுடன், நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்து மூன்று கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கையொப்பமிட்டு தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஓரங்கட்டி தாங்கள் அந்த அதிகாரத்திற்கு வரவேண்டும் என நினைக்கின்ற சக்திகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கூட்டாட்சி நடத்துவதாக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றன” என கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்