சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமைஎடுத்துவரப்படவுள்ளது!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் வித்துடல் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கை செல்ல இந்திய மத்திய அரசு கடந்த 24ஆம் திகதி அனுமதி அளித்த நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீரென்று நேற்றுக் காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சாந்தன் உயிரிழந்தார்.

அவரின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தப்பட்டது? என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்லத் தேவையான தூதரக அனுமதி, ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் நீதிமன்றில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னணி சட்டத்தரணி புகழேந்தி தலைமையில் நாளை சாந்தனின் வித்துடல் நாளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்