சுமந்திரனின் அடுத்த வெற்றி! யாழ்.மாநகர முதல்வர் வேட்பாளராகிறார் ஆனோல்ட்!!

தமிழரசுக்கட்சிக்குள் நிலவிய நீண்ட இழுபறிகளின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் யாழ்.மாநகரசபை முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தின் உயர் பதவியாக விளங்கக்கூடியவற்றில் யாழ்.மாநகரசபை முதல்வர் பதவி விளங்கிவருகிறது.

இந்தப் பதவியை இலக்குவைத்து தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தங்கள் விசுவாசிகளை முன்நிறுத்தி கருத்துமோதல்களில் ஈடுபட்டுவந்திருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறிலை நியமிக்கவேண்டும் என்று சி.வி.கே.சிவஞானம் தரப்பும் பத்திரிகையாளர் ந.வித்தியாதரனை நியமிக்க வேண்டும் என்று சம்பந்தன் தரப்பும், வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகத்தை நியமிக்கவேண்டும் என்று மாவை சேனாதிராஜா தரப்பும் வலியுறுத்தி வந்திருந்த நிலையில் சுமந்திரன் தன்னுடைய விசுவாசியாக தொடர்ந்தும் விளங்கிவருகின்ற மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட்டை களம் இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதனிடையே பத்திரிகையாளர் ந.வித்தியாதரனை களமிறக்கவேண்டாம் எனத் தெரிவித்து மாவை சேனாதிராஜாவை தொடர் அழுத்தத்துக்கு உட்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இராப்போசனம் ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பத்திரிகையாளர் ந.வித்தியாதரனின் பத்திரிகை தமிழரசுக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுப்பதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக யாழ்ப்பாண ஊடகத் தரப்பில் பேசப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க ஆனோல்ட் மாநகர முதல்வராக தெரிவாகியுள்ள விடயம் தமிழரசுக்கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகின்ற போதிலும் சுமந்திரனின் முடிவினை எவரும் மாற்றியமைக்க முடியவில்லை எனத் தெரியவருகிறது. சாவகச்சேரி நகரசபை வேட்பாளர்கள் நியமனத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் விசுவாசத்துக்குரிய மாகாணசபை உறுப்பினர் சயந்தன் தன்னுடைய விருப்பிற்கு அமைய வேட்பாளர்களை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வேட்பாளராக களமிறங்க முடிவாகியுள்ள நிலையில் தன்னுடைய மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஆனோல்ட் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால்
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று
இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும

About காண்டீபன்

மறுமொழி இடவும்