பெண் பிள்ளைகளின் பாதுகாப்பான வாழ்விற்கு பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

பெண்பிள்ளைகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தமது பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும் இயல்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இனவழிப்பு போர் காரணமாக இரண்டு தடவை இடப்பெயர்வினைச் சந்தித்து தமது வாழ்க்கையை மீள ஆரம்பித்துவரும் வேளையில் பல்வேறு காரணங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பெண்களுக்கான தொழிற்கூடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.அல்லைப்பிட்டி பங்குத் தந்தை டேவிட் அடிகளார் அவர்களின் ஏற்பாட்டில் நிறுவப்பட்டிருக்கும் தொழிற்கூடத் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்த அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்…

போருக்கு பின்னரான இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அவை முழுவதுமாக வெளியே தெரிவதில்லை அவ்வாறான பிரச்சினைகள் குறித்து கதைத்து ஆலோசிப்பதற்கேற்ப இயல்பான சூழல் பெரும்பாலான வீடுகளில் இருப்பதில்லை என்பதே உண்மையாகும். அதன் காரணமாகவே பிரச்சினைகளில் சிக்கும் பெண்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கும் நிலையேற்படுகின்றது.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தத்தமது பிள்ளைகள் குறித்து கனவுகள் இருக்கும். அதில் தவறில்லை. ஆனால் அந்த கனவுகளை நனவாக்க விரும்பும் பெற்றோரின் முயற்சிகளில் சில தடங்கல்கள் இருக்கின்றது. பெரும்பாலான பெற்றோர் தொலைக்காட்சி நாடகங்களுக்கு அடிமையாகக் கிடக்கின்றதை பார்க்க முடிகின்றது. அவ்வாறு பெற்றோரின் வழியில் வீட்டில் உள்ள அனைவரும் வயது வேறுபாடின்றி தொலைக்காட்சி நாடகத்திற்குள் மூழ்கிப்போயுள்ளார்கள்.

உரிமைக்காக போராட்டத்தை நடத்தி இனவழிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கும் எம்மை இழந்துவிட்ட உரிமை பற்றி சிந்திக்கவிடாமல் செய்கின்ற ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே இதனைப் பார்க்கின்றேன். அதைவிட இத் தொடர் நாடகங்களின் மூலம் மிக மோசமான கலாச்சார சீரழிவுகளும் எமது சமூதாயத்தில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றதை மிக வேதனையுடன் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தொடர் நாடகங்களை பார்ப்பதால் கிடைக்கும் அற்ப சந்தோசத்தை ஒவ்வொரு பெற்றோரும் தியாகம் செய்வதன் மூலம்தான் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உதவமுடியும்.

போரை எதிர்கொண்டு வந்த நெருக்கடியான நிலையில் கூட விடுதலைப் புலிகள் கல்வியிலும் வெகுவாக கவனம் செலுத்தியிருந்தார்கள். இன்று கல்வியில் மிக மோசமான நிலையில் இருக்கின்றோம். ஒன்பது மாகாணங்களில் வட மாகாணம் ஒன்பதாவதாக இருக்கின்றது. ஆசிரியர்கள் தமது கடமையினை சரிவரச் செய்கின்ற போதிலும் பெற்றோர் தமது கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறுவதனாலேயே கல்வியில் பெரும் பின்னடைவினை நாம் சந்தித்து நிற்கின்றோம்.

ஆகவே, பொருளாதார ரீதியில் எம்மை பலப்படுத்துவதில் காட்டும் அதே அக்கறையை எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாட்டிலும் காட்டுவது மிக மிக அவசியமாகும். அழியாத செல்வமாகிய கல்வியை எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலமே எமது அடுத்த தலைமுறை தன்னுடைய காலிலேயே நிற்கும் நிலையை ஏற்படுத்த முடியும்.

சமூதாய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத் தொழிற்கூடத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், கூட்டுறவு அமச்சராக இருக்கும் என்னால் ஆன உதவிகளை நிச்சயம் செய்வதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்