முற்றவெளி திறந்த வெளி சுடலையானது!

முற்றவெளியில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை தகனக்கிரியை செய்வதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வியடைந்துள்ளதுடன் நீதிமன்றம் தடையுத்தரவு பிறக்க மறுப்பும் தெரிவித்துள்ளது.

விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரியகுள நாக விகாரையில் இருந்து ”யாப்பணய” நகரின் ஊடாக மறைந்த பிக்குவின் உடல் முற்றவெளிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து விமானப்படை விமான மூலம் எடுத்துவரப்பட்ட சடலம் முதலில் நாகவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்.நகரினூடாக முற்றவெளிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதற்காக நகரின் போக்குவரத்து ஏற்பாடுகள் மாற்றப்பட்டன. பெருமளவிலான தென்பகுதி மக்கள் பஸ்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளனர். முற்றவெளி காவிக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு தகனத்திற்கு தயாராக உள்ளது.
இதேவேளை ஆயிரக்கணக்கில் படையினர் வெள்ளை உடைகள் அணிந்த நிலையினில் முற்றவெளியில் இறக்கப்பட்டுவருகின்றனர்.முப்படைகளை சேர்ந்தவர்களும் வந்து குவிந்த வண்ணமுள்ளனர்.

தமிழ் மக்கள் வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களாக உள்ளனர்.

இதனிடையே முற்றவெளியை சுடலையாக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எந்தவித உத்தரவுகளுமின்றி யாழ். முற்றவெளியில் இந்து ஆலயம் மற்றும் தமிழாராய்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் விகாராதிபதியான பௌத்த பிக்குவை எரியூட்டுவதற்கு இரானுவத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தமிழ்மக்களின் கலாசாரத்தை அழிவுக்குள்ளாக்குகின்ற அல்லது கேலி செய்யக் கூடியதொரு செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறித்த செயற்பாடு தொடர்பில் தனது கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார். இன்று(22) பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்