வவுனியாவில் 40இற்கு 60 என்ற அடிப்படையில் இ.போ.ஸ., தனியார் பேரூந்து சேவை; கொழும்பு குழு முதலமைச்சரை சந்தித்து முடிவு

வடக்கு மாகாண போக்குவரத்து சேவையில் காணப்பட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதோடு, இன்று பிற்பகல் 2 மணியுடன் சேவைக்கு திரும்புவதாக அரச போக்குவரத்து பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் விசேட குழுவினருக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அரச பேரூந்து பணியாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சேவையை ஆரம்பிக்க வேண்டுமென முதலமைச்சர் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் வடக்கு மாகாணத்தின் சகல அரச பேரூந்து பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக கொழும்பில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றதோடு, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் குழுவினர் முதலமைச்சரை சந்தித்தனர்.

இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதோடு, வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே காணப்பட்ட 40இற்கு 60 என்ற விகிதாசார அடிப்படையில் சேவையில் ஈடுபட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவையாளர்கள் இணங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தூர இடங்களிலிருந்து பிரயாணங்களை மேற்கொள்ளும் பேரூந்துகள், வவுனியா பேரூந்து நிலையத்தில் நிறுத்தாமல் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை,

இன்று காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, கொரவப்பத்தான வீதி, யாழ் விதியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்து.

About இலக்கியன்

மறுமொழி இடவும்