வடக்கு முதல்வரை பிரித்தானிய நாடாளுமன்றக்குழு சந்திப்பதை நிறுத்திய சுமந்திரன்!

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானியாவின் சர்வகட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்க விடாது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடுத்தார் என கொழும்பிலிருந்து கிடைத்த நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

உத்தியோகபூர்வ பயணமாக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட சர்வ கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பயணமாகவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ். கோட்டை, யாழ். பொதுநூலகம் போன்றவற்றை சென்று பார்வையிடவுள்ள அக்குழுவினர், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, இராணுவத்தின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இந்தக் குழுவினர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கமாட்டார்கள் எனத் தெரிகின்றது. அவரை சந்திப்பது தொடர்பிலும் அவர்கள் திட்டமிடவில்லை எனக் கூறப்படுகின்றது.

முன்னதாக கொழும்பில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்துப் பேசியிருந்தனர். அவரின் அழைப்பின் பேரிலேயே இன்று அவர்கள் யாழ்ப்பாணம் பயணமாகின்றனர்.

குறித்த சந்திப்பின் போதே விக்னேஸ்வரனை சந்திப்பதைத் தடுப்பதற்கான முயற்சியை சுமந்திரன் மேற்கொண்டதாக சுமந்திரனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மலேசியப் பிரதமர் சிறிலங்காவிற்கு பயணத்தினை மேற்கொண்டபோதும் வடக்கு முதல்வரை சந்திக்கவிடாது தடுக்கும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டிருந்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்