அகதியாக இருந்தாலும் கௌரவமாகவும் நிம்மதியாவும் இருந்தேன்!

வாக்குறுதிகளை நம்பி நாடு திரும்பிய நான், பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கினன். ஆஸ்திரேலியா அகதியாக இருந்தாலும், கௌரவமாகவும் நிம்மதியாவும் இருந்தனான், குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் என பலர் விசாரித்தனர். வழக்கு இன்னமும் முடியவில்லை என்கிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தலுடனேயே வாழ்ந்து வருகின்றார். பிறந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியாமல், உறவுகளை, உடைமைகளை இழந்து, உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய நிலையில் சொந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ள மக்களை அகதிகள் என்கின்றோம். உலகளாவிய ரீதியில் 65.6 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

மோதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக இந்த இடம்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை பிரித்தானிய சனத்தொகையை விட, அதிகம் எனவும், 2016 ஆம் ஆண்டைவிட அகதிகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தால் கடந்த ஆண்டு உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

40.3 மில்லியன் மக்கள் தத்தமது நாடுகளுக்குள் இடம்பெயர்ந்து வாழ்வதாகவும் 2.8 மில்லியன் மக்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அகதிகளின் சனத்தொகையில் 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் அரைவாசிக்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்சூடான் ஆகிய நாடுகளில் இருந்தே அரைவாசிக்கும் அதிகமான அகதிகள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. தென்சூடானில் நீடிக்கும் நெருக்கடிகளால் அங்கிருந்து இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துவருகின்றது. இதேவேளை, சிரியாவிலுள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களில் இலங்கையும் உள்ளடக்கமே, கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்த 30 வருட யுத்தம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த, வாழும் மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்திய தோடு, அவர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் புகவைத்தது.

ஆயிரக்கணக்கான வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்கும் இடம்பெயர்ந்தனர். தமது உடைமைகள், உறவுகளை இழந்தாலும், தமது உயிரையேனும் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் அவர்கள் படகுகள் ஊடாக ஆபத்துமிக்க பயணங்களை மேற்கொண்டு அந்த நாடுகளை சென்றடைந்தனர். சிலர் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்துக்களால் உயரிழந்த சம்பவங்களும் பாதிவாகியிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கடந்த வருடம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளான 39,730பேர் மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்தியாவின் தமிழகத்தின் மாத்திரம். சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்ததோடு, முடிவுக்கு வந்த யுத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் குறிப்பிடத்தக்க மக்கள் நாடு திரும்பியுள்ளனர். என்றாலும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தமிழகத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்தாலும் வடக்கில் வாழும் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களது பாதுகாப்புத் தொடர்பில் கொண்டுள்ள அச்சம் இதுவரை நீங்கவில்லை. ஏதோ ஒரு நாட்டில் தமக்கு பாதுகாப்பு கிடைக்குமென நம்பும் தமிழர்கள், முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலும் சரி தற்போதைய மைத்திரி ரணில் அரசாங்கத்தின் ஆட்சியிலும் சரி, தமது சொந்த நாட்டில் கிடைக்காதென்பதில் தீவிரமான நம்பிக்கை கொண்டுள்ளனர். என்றாலும், தற்போதைய தேசிய அரசாங்கத்தின் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள இலங்கை மக்கள் அனைவரும் மீளவும் நாட்டுக்கு வருகை தரவேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என்ற பேதம் பாராமல் அனைவரும் புலம்பெயர்ந்த இலங்கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்கியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 2015ஆம் ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார்.

அதேவேளை, புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு தெற்கு பகுதிகளின் அபிவிருத்திக்கு தமது முதலீடுகளை மேற்கொள்ள பகிரங்க அழைப்பை விடுத்திருந்த பிரதமர் ரணில் விக்ரம சிங்க, புலம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களும் நாடு திரும்ப வேண்டுமெனவும் அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

என்றாலும், நாடு திரும்பிய சசிக்கு என்ன நடந்தது? பாதுகாப்புத் தேடி, ஓடிய நாட்டிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பிய அவருக்கு விசாரணைகளும், வழக்குகளும் தொடர்கின்றனவே தவிர, நிம்மதியாய் வாழ்க்கையை கொண்டு செல்ல வாய்ப்பளிக்கப்படவில்லை.

என்னை மூன்று வருடங்களாக சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கின்றார்கள். என்னைப் போல் பலரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றார்கள். என்றாலும், சொந்த நாட்டிற்கு போக விருப்பமில்ல. ஏனென்றால், எமது உயிருக்கு உத்தரவாம் இல்லை என்கின்றார் தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதியான குகன்.

இந்த விடயமானது நமது தாய்நாடு தொடர்பிலான ஒரு பிரஜையின் நம்பிக்கையீனத்தையே பறைசாற்றி நிற்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில், தமிழர்களை இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதோடு, அவர்களை கைது செய்யவும் ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து கடற்படைக்கான ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையெனவும் கூறும் அரசாங்கம், தமிழர்களை சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் என்ற பிரசாரத்திற்கு உட்படுத்தி, அவர்களை சர்வதேச ரீதியாக தவறானவர்களாக காண்பிப்பதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும், சிங்களக் குடியேற்றங்கள், திடீரென முளைக்கும் பௌத்த விகாரைகள் என்பன தமிழர்களை தொடர்ச்சியாக அகதிகளாகவே இருப்பதற்கான காரணங்களாக அமைந்துள்ளன. பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் நில மீட்புப் போராட்டங்களுக்கும் எந்தவிதமான பதிலையும் வழங்காது தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. (கேப்பாப்பிலவில் 300 நாட்களைக் கடந்து நில மீட்புப் போராட்டம் தொடர்கிறது) இவ்வாறான காரணங்களால் தமது தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் தமிழர்கள் தமது சொந்தப் பிரதேசத்திலேயே அகதிகளாக வாழ்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்சியாளர்கள் மாறினாலும் ஆட்சியில் மாற்றமில்லை. மீண்டும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. ஆகவே, நாடு திரும்புவதில் பிரயோசனமில்லை என்கின்றார் அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இளையவன்னியன்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்காது காலத்தைக் கடத்திவரும் ரணில் மைத்திரி தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கமோ இந்தியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்துள்ள அகதிகளை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்து வருவது வேடிக்கையாக இருக்கின்றது என்பது அவரது கருத்து.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று நாளையுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கேணும் இதுவரை தீர்வுகள் முழுமையாக முன்வைக்கப்படவில்லை. தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மாத்திரமே சர்வதேசத்திற்கும், தேசத்திற்கும் வழங்கி வரும் அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்பதியளிக்கக்கூடிய வகையில் அமையவில்லை என்பதே அனைவரது குற்றச்சாட்டு. கடந்த வருட இறுதிக் காலாண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விசேட சர்வதேச நிபுணர்கள் அனைவரதும் குற்றச்சாட்டும் இதுவாகவே அமைந்திருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் உள்நாட்டில் வாழும் மக்களின் பிரச்சினைகளையே தீர்க்க நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், நாடு திரும்பும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப்போகின்றது என்பதே கேள்விக்குறி. அதேவேளை, நாடு திரும்பும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் விசாரணைக்கு உட்படுத்தும் இலங்கை பாதுகாப்புத் தரப்பின் செயற்பாடுகள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தை தோற்றுவித்துள்ளது என்றால் அது மிகையல்ல.எனினும், நம்பிக்கையிழந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பவேண்டுமானால் அவர்கள் அச்சமின்றி நிம்மதியான அனைத்து உரித்துக்களுடனும் வாழக்கூடிய நிரந்தரத் தீர்வொன்றை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

துளசி

தொடர்டர்புடைய செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*