தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுத்தராது இலங்கையில் உண்மையான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது! அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தல்!

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுத்தராது இலங்கையில் உண்மையான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது என்று தன்னைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நடைமுறை அரசியல் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கிலும் நட்புரீதியான உறவை மேம்படுத்தும் முகமாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் 09.01.2018 அன்று சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அரசியல் விவகாரங்களுக்கான பிரதி பிரதம அதிகாரி Patric Tillou மற்றும் இலங்கைக்கான அரசியல் விவகார அதிகாரி Sean Ruthe ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுடனான இச்சந்திப்பில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..

மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் கடுமையான உயிர் அச்சுறுத்தல் இருந்த நேரத்தில் தான் எனது அரசியல் பிரவேசம் இருந்தது. அரசியலை விட்டு ஒதுங்கிவிடலாமோ என்று எண்ணுமளவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருந்தது. அந்த நேரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றிய மிச்சேல் ஜே சிசன் அம்மையார் வழங்கியிருந்த ஆதரவுதான் என்னை தொடர்ந்தும் பயணிக்க வைத்தது என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

வட மாகாண அமைச்சராக எவ்வாறு செயற்பட்டு வருகின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்…

பெயருக்கு பல அமைச்சுகளுக்குரிய அமைச்சராக இருந்தாலும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில் மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகிய அமைச்சுகளின் முழுமையான செயற்பாடென்பது உடனடித் தேவையாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த அமைச்சுக்கான ஆளணியும் இல்லாமல் நிதியும் இல்லாமல் பெயரளவிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் போரினால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக போரிற்கு பின்னர் வடக்கு மாகாணம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இவ்வாறன நிலையில் இருந்து எமது மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் இவ் அமைச்சுகள் முழுமையான வினைத்திறனுடன் இயங்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்போதும் இலங்கை இராணுவத்தினரால் பெண் தலைமத்துவ குடும்பங்கள் மீதான வன்முறைகள் இடம்பெறுகிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்…

காணாமலாக்கப்பட்டவர்களது வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் இரவு நேரங்களில் இராணுவத்தினர் செல்லும் சம்பங்கள் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு இரவு வேளைகளில் பெண்கள் தனியாக இருக்கம் வீடுகளிற்கு இராணுவம் சென்று வருவதனால் அயலவர்கள் மத்தியில் குறித்த குடும்பங்கள் குறித்து தப்பான அபிப்பிராயம் ஏற்படுகிறது. அதைவிட அவர்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கிச் சென்று இரவு வேளைகளில் தொல்லை கொடுப்பதும் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே தம்மை திருமணம் செய்யுமாறு இராணுவத்தினரோ, இராணுவ புலனாய்வாளர்களோ வலியுறுத்தி வருவதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு வந்து கொண்டிருக்கின்றது.

புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பெண்களில் சிலர் எங்களுடன் இணைந்து சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் போது, அமைதியாக இருக்காது விட்டால் மீண்டும் புனர்வாழ்விற்கு அனுப்பிவிடுவோம் என நேரடியாகவே இராணுவ புலனாய்வாளர்களால் மிரட்டப்படுகிறார்கள். இதனால் அவர்கள் ஒடுங்கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினராலும் புலனாய்வுத்துறையினராலும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், முறைகேடுகள் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இவை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்..

இங்கு செயற்படும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் தான் இயக்கி வருவதாக மக்கள் கருதுவதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த முறைப்பாடுகளுக்கு இதுவரை எந்த விதமான தீர்வுகளையும் அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையும் இந்த நம்பிக்கையின்மைக்கு ஒரு காரணமாகும்.

இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள போதிலும் இதுவரை அதற்கான நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை. காலங்கள் நீண்டுகொண்டு செல்வதால் வறுமை ஒருபக்கமும் உளவியல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள் மறுபக்கமுமாக வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில்தான் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இராணுவத்தின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்பட வில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாகட்டும் அல்லது காணி விடுவிப்பு பிரச்சினைகள், புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரினால் ஏற்பட்ட பக்கவிழைவுகளே. எனவே புனர்வாழ்வு, அபிவிருத்தியை காரணம்காட்டி நிரந்தரத் தீர்வை காலங்கடத்துவதனை ஏற்கமுடியாது.

அரசியல் கைதிகளின் விடுதலையும் வெறும் வாக்குறுதிகள் மட்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில் முடிவின்றித் தொடர்ந்து வருகின்றது. அரசியல் கைதிகளாக இருப்பவர்களது குடும்பங்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக குடும்பத் தலைவர்களாக உள்ளவர்கள் சிறையில் இருப்பதால் வருமானம் இன்றி அக் குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலை காணப்படுகின்றது. இதனால் அவர்களது பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனது கணவரது வழக்கில் சாட்சியமளித்திருந்த இராணுவத் தளபதி தமது சொந்தக் காவலில் தடுத்து வைக்கபட்டிருந்த விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களது பெயர் பட்டியலை வழங்கி ஏமாற்றியுள்ளார்.

போரினால் எமது மனங்களில் ஆழமாக ஏற்பட்டிருக்கும் வடுக்களை சீர்செய்யாமல் எத்தனை கோடிகளை கொட்டினாலும் இந்த மண்ணில் நல்லாட்சியையோ நல்லிணக்கத்தையோ ஏற்படுத்திவிட முடியாது. இந்த காயங்கள் ஆற வேண்டும். அதற்கான பொறுப்புக்கூறலை இந்த அரசு செய்வதற்கு போரிற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தராது இலங்கையில் உண்மையான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது.

தமிழர்களின் உற்ற தோழனாக இருந்து நீதி, நியாயத்தின் பாற்பட்டு தமிழர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தர அமெரிக்கா தொடர்ந்தும் பாடுபடவேண்டும் என்று தன்னைச் சந்தித்த அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம்
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச்
இராணுவ வசம் உள்ள வவுனியா கூட்டுறவு கல்லூரி கட்டிடத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட மாகாண கூட்டுறவு மற்றும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*