வல்வெட்டித்துறையில் இனஅழிப்பு பங்காளி மஹிந்த அமரவீர!

வல்வெட்டித்துறை பட்டம் விடும் நிகழ்வு இம்முறை அரசினது இலங்கை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ,அரச யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் சகிதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.அதிலும் வல்வெட்டித்துறையில் மக்களிற்குள்ள முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, பட்டப்போட்டிகளை நடத்த பெரியதொரு கடற்கரை வேண்டுமென நிகழ்வில் உரையாற்றிய அரச யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் அமைச்சர் மஹிந்த அமரவீரடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீண்டதொரு அகிம்சை போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியான உலகை திரும்பிப்பார்க்க வைத்த ஆயுதப்போராட்டத்தின் மையமாக வல்வெட்டித்துறை இருந்திருந்தது அனைவரும் அறிந்ததொன்றே.விடுதலைப்போராட்டத்தையும் வல்வெட்டித்துறையினையும் பிரித்து பேச முடியாதென்பதும் அனைவரும் அறிந்ததொன்றே.

அத்தகைய வரலாற்றுப்பின்னணி கொண்ட வல்வெட்டித்துறைக்கு இனஅழிப்பின் முக்கிய பங்காளிகளுள் ஒருவராக இருந்த அமைச்சரையும் அக்கட்சியினது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் வல்வெட்டித்துறை மண்ணில் அனுமதித்தமை கடும் சீற்றத்தை தமிழ் உணர்வாளர்களிடையே தோற்றுவித்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் விழா ஏற்பாட்டுக்குழுவினர் தன்னிடம் தேடிவந்து விடுத்த அழைப்பின் பேரிலேயே கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை அழைத்து வந்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் அரசுடன் தற்போது நல்லுறவை வளர்க்க முற்பட்டுள்ள வடமாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கமும் மேடையில் அமர்ந்திருந்து நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்