நடுக்கத்தைச் சமாளிக்கவே கூட்டமைப்பினர் எங்களிடம் பேசினர்! – வரதர்

மாற்று அணி குறித்து கூட்டமைப்பினர் அச்சம் கொண்டதால் தான் எம்மிடம் பேசினர் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘புதிய தலைமை மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்களைச் சந்திக்கின்ற போது நேரடியாகவே நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஓர் அணியாக இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக வந்து விடுவார்கள் என்று கூட்டமைப்பினர் ஆட்டம் கண்டு நடுங்கிப் போயிருந்தனர். அந்த நடுக்கத்தைச் சமாளிப்பதற்காகவே எங்களிடம் கூட்டமைப்பினர் அவர்களாகவே பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

அவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பிய போது ஒற்றுமை என்பது பிரதானம் என்ற அடிப்படையில் நாமும் அதனை மறுதலிக்கவில்லை. அத்தோடு அந்த ஒற்றுமையானது கௌரவமானதாகவும் சமத்துவமானதாகவும் இருக்க வேண்டுமென்று நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆயினும் முதலமைச்சர் தலைமையிலான அந்தக் கூட்டு உடைந்து, சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பிரிந்து தனித்தனியாக செயற்பட்டனர். முதலமைச்சரும் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இவ்வாறான நிலையில், அதற்கு பின்னர் எம்முடன் எந்தவித தொடர்பையும் கூட்டமைப்பினர் ஏற்படுத்தவில்லை. ஆகையால் தான் அவர்கள் தமது நடுக்கத்தைக் குறைக்க தமக்காகவே எம்மிடம் வந்ததை உணர்ந்து கொண்ட நாம் அவர்களுடன் இணைவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டோம் என தெரிவித்தார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்