அதிமுக என்ற கப்பல் இந்திய பெருங் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.

பிளவுபட்டுப்போன அண்ணா திமுக கட்சியில் இருக்கும் முன்னணி அணிகளான, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முந்னாள் முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் அணியும் சமரசம் செய்து இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு புள்ளிக்கு வரவிருப்பதற்கான சில சமிக்கைகள் தெரிகிறது.

முன்னணி அணிகள் என்று குறிப்பிடுவதற்கான காரணம் பிரிந்திருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இரண்டும் இணையும்போது தெறித்து உண்டாகியிருக்கும் விரிசல் காரணமாக தினகரன்+ சசிகலா என்றொரு புதிய அணியும், மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி ஆகியவற்றை குறித்து இப்போ இணைய இருப்பது முன்னணி அணிகள் என உணரமுடிகிறது.

கப்பல் கடலில் மூழ்கிவிடும் அபாயத்தை உணர்ந்து தமிழ் வருடப்பிறப்பான ஏப் 14 தொடங்கிய சமரசத்துக்கான பேச்சுவார்த்தை வேறு சில புறக்காரணிகளின் தாக்கத்தை கருதி துரிதமாக்கப்பட்டு இரு தரப்பும் கைபிடித்து கரையேறுவதற்கு ஒரு வழியை தோற்றுவித்திருக்கிறது.

அதிமுகவின் மீதமுள்ள நான்கு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் ஆறுமாத காலத்தையாவது அதிமுக தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வியும் கூடவே எழுந்து நிற்கிறது, காலம் ஒன்றுதான் அதற்கு பதில்சொல்லும் நிலையில் இருக்கிறது.

சசிகலாவின் சிறைவாசத்தின் பின்னர் தனிக்காட்டு ராசாவாக, எம்ஜீஆர் ஜெயலலிதா போன்ற ஆளுமைகளையும் விஞ்சி நிற்கும் விதமாக கட்சிக்குள் பரந்து விரிந்து பாய்ந்த நீர் ஊற்றுப்போல செயற்பட்ட ரிரிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கடியான நேரம் இது. அவர் திரும்புமிடமெல்லாம் விட்டம் தலையில் அடிக்கிறது, எடுத்துவைக்கும் ஒவ்வொரு கால் அடியும் தடக்கி விழுத்துகிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் கடுமையான நெருக்குவாரம், அதையொட்டிய இரட்டை இலை முடக்கம், தேர்தல் ஆணையத்தின் மூலம் உண்டான புதிய சிக்கல்கள், பல்வேறு சட்டச்சிக்கல்கள் என்று ரிரிவி தினகரன் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆனையத்திற்கு 60, கோடிகள்வரை லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்ற ஆதாரபூர்வமான குற்றச்சாட்டில் அவர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரங்களும் இருப்பதாக தெரிகிறது, இன்று தினகரனை விசாரணை செய்வதற்காக டில்லி காவல்த்துறை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய காட்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது

தற்போதய சூழ்நிலையை வெளியில் இருந்து பார்ப்பவர்கள், தனிமைபடுத்தப்பட்ட தினகரன் உணர்ச்சி வசப்பட்டு ஆட்சிக்கு ஏதாவது குந்தகம் செய்து ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சிக்க விடமாட்டாரா என்ற இயல்பான ஐயம் எழுவதை உணர முடிகிறது, இருந்தும் அவர் தனக்கென்று ஒரு அணியை சேர்த்துக்கொண்டு பல்வேறு விதமான மிரட்டல் நாடகங்களை நிகழ்த்தினாலும் தனது எதிர்காலம் கருதி ஆட்சி கலைப்பு முயற்சிகளில் இறங்கமாட்டார் என்றே கொள்ளலாம், உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள தினகரன் மூலம் ஆட்சி கலைப்பு நிகழ்வதற்கான சந்தற்பம் மிகவும் குறைவு என்றே கருத முடிகிறது.

தினகரன் தனக்கென்று ஒரு அணியை வகுத்துக்கொண்டு அமைதியாக வெளியில் இருந்து கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தவே அவர் விரும்புவார், வீக்கமான எதிர்வினைகளை அவர் இப்போதைக்கு கட்சிக்குள் காட்டமாட்டார், கட்சியின் நிழலுக்குள் இருந்தால் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்ற வழக்கு, மற்றும் நிலுவையிலுள்ள அன்னிய செலவாணி மோசடி வழக்கு போன்றவைகளை சந்திக்க இலகுவாக இருக்கும் என்றே அவர் நம்புவார்.

கிட்டத்தட்ட இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் இரு அணிகளும் இணைந்துவிடும் என்பதாகவே செய்திகள் வருகின்றன?

பணம், பதவியை தற்காத்துக்கொள்ளல், சுயநாலன் ஆகியவற்றை கருதி சசிகலா காலடியில் நின்று பன்னீர்செல்வத்தை சரமாரியாக வாரி தூற்றிய கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இன்று ஒன்றும் நடக்காதவர்கள்போல பிளேட்டை மாற்றிப்போட்டு வேறுவிதமாக பேச தொடங்கியிருக்கின்றனர்,

இந்திய அரசியலில் இது ஒன்றும் புதிய வார்ப்புக்கள் இல்லை, நரம்பு இல்லாத நாவால் பதவிக்காக எதையும் பேசக்கூடிய விலங்குகள்தான் அரசியல்வாதிகள் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

இரு அணிகளும் ஒன்றுபடுவதை பாஜக நிச்சியம் ரசிக்கப்போவதில்லை, அதிமுக இரு கூறுகளாக பிரிந்திருக்கவேண்டும் என்பதுதான் பாஜகவின் பெரு விருப்பம், தொடர் நெருக்கடிகளை கொடுத்து ஒருகட்டத்தில் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் நோக்கத்தில்த்தான் பாஜக காய் நகர்த்திக்கொண்டிருந்தது, அதன் முன்னோட்டமாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராக இருந்த பிரபாகர் ராவை நிரந்தர ஆளுனராக நியமிக்க இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

பல்வேறு இராசதந்திர நகர்வுகளை கணக்கில் கொண்டு ஜெயலலிதாவின் மறைவின்பின் மோடியின் விருப்புக்கமைய காலதாமதம் செய்யாமல் டிச 05 2016 அன்று இரவோடு இரவாக ஒரு சில மணி நேரங்களில் ஓபிஎஸ் முதலமைச்சராக்கப்படார், ஓ பன்னீர்செல்வத்திடமிருந்து கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குழுமம் கைப்பற்ற முயலும் என்பதை அறிந்து பாஜக சில ஒழுங்கு முறைகளை வகைப்படுத்தி பன்னீர்செல்வத்தை மிக கவனமாக பின்னின்று இயக்கியது,

சசிகலா தரப்பு வேறு கணக்குக்களை போட்டு வைத்திருந்தது, அதனால் அமைச்சர்கள் சிலரை தூண்டிவிட்டு ஆட்சியும் கட்சியும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்று ஜெயலலிதாவை மேற்கோளாக காட்டி சசிகலாவை பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் தெரிவு செய்ய சில குறுக்கு வழிகளை தோற்றுவித்தனர்.

கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென சசிகலா தரப்பினால் அழைக்கப்பட்ட பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையொப்பம் இடும் அளவுக்கு தள்ளப்பட்டார். மத்திய பாஜக இதை எதிர்பார்க்கவில்லை பன்னீர்செல்வம் எதிர்பார்த்த விடயமாக இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் கதை முடியும் என்று அவர் நினைக்கவில்லை.

பாஜகவின் திசை திருப்பு மாற்று உபாயமாக தியானம் என்ற நாடகத்தை தொடங்கி கட்சியை உடைத்துக்கொண்டு பன்னீர்செல்வம் வெளியேறி செயற்பட்டார், பாஜக நினைத்ததுபோன்று அதிகளவான எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வத்துடன் வெளியேறவில்லை. சசிகலா பதவி ஏற்றுவிடக்கூடாது என்பதற்காக உடனடி ஏற்பாடாக ஆளுனரால் பதவிப்பிரமாணம் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு உச்ச நீதிமன்ற உதவியுடன் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் பாஜகவின் பழைய நண்பர்களான ஓரளவு மக்கள் ஆதரவு பெற்ற மைத்ரேயன்,மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஓபி எஸ்ஸுக்கு சாதகமாக பாஜகவால் தெரிவுசெய்யப்பட்டனர்.

மக்கள் மத்தியிலும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் இருந்த சசிகலா மீதான வெறுப்பு பன்னீர்செல்வத்தின் இயல்பான பணிவு வர்தா புயல், ஜல்லிக்கட்டு நெருக்கடிகளின்போது பன்னீர்செல்வம் செயற்பட்ட முறை மக்கள் மன்றத்தில் பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமையப்பெற்றது.

சசிகலா குடும்பத்தை விரும்பாத அதிகளவிலான ஊடகங்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தன, தமிழகம் முற்றிலும் அதிமுக கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் நிலையும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதும் புறந்தள்ளக்கூடியவை அல்ல.

அதன்பின் நிகழ்ந்த இரட்டை இலை முடக்கம், கட்சியின் பெயர் பாவிக்க தடை, இவை எல்லாமே ஓரளவுக்கு பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக இருந்தது, ஆர் கே நகர் தேர்தலில் தினகரன் தோற்றுப்போவார் என்பதாக பல கருத்து கணிப்புகள் வெளிவந்தன, எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் பணம் ஆறாக ஓடியது. ஒன்றின்பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டு, ஒன்றிணைந்து சசிகலா குடும்பம் தள்ளிவைக்கப்பட்டு இணைவு என்ற முடிவுக்கு கட்சி வந்திருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடந்ததுபோன்ற நிலையை எடுத்து மத்திய அரசின் அசைவாக்கத்துக்கு இசைவாக நகர முற்படுவதாகவே நெடுவாசல் ஹைட்றோ கார்பன் திட்டம் திரும்ப நடைமுறை, விவசாயிகளின் டில்லி போராட்டத்தில் மத்திய அரசின் போக்குக்கு எதிர்ப்பு காட்டாமல் மௌனம் காத்தமை போன்ற செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

பன்னீர்செல்வத்தை பயன்படுத்திய பாஜக தேவை ஏற்பட்டால் பன்னீர்செல்வத்தை புறந்தள்ளிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை பலிகொடுக்கவும் தயங்கப்போவதில்லை.

இரு அணிகளும் இணையலாம், இரட்டை இலையை மீட்கலாம், ஆர் கே நகர் தேர்தலில் வெல்லலாம், கட்சியை வழிநடதப்போவது யார் என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பழனிச்சாமி அணி ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்பதாகவே தெரிகிறது. பழனிச்சாமியிடமிருந்து முதல்வர் பதவியை பன்னீருக்கு கொடுக்க தம்பித்துரை, ஜெயக்குமார், உதயகுமார் போன்ற எவரும் ஒத்துக்கொள்ளப்போவதில்லை சுருக்கமாக சொல்லப்போனால் அதிமுக இப்போது பாய்மரமும் துடுப்பும் மாலுமியும் இல்லாத ஒரு படகு.

இரட்சிக்கும் காவலனாக கப்பலை காப்பாற்ற ஜெயலலிதா போன்ற மாலுமி இல்லை மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் எவரும் கட்சிக்குள் இருப்பதாகவும் உணர முடியவில்லை. யாராவது இருந்தாலும் அவரை முன்னிலைப்படுத்த மந்தைக்குள் இருக்கும் ஆடுகள் ஒத்துக்கொள்ளப்போவதுமில்லை, எனவே கப்பல் கடலில் முழ்குவதை தவிர கண்ணுக்கெட்டிய நூரம்வரை எதுவும் தெரியவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் நீண்ட நெடிய அனுபவம் நிறைந்த அரசியற் தலைவர்கள், இருந்தும் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் தனித்து நின்று ஆட்சியை பிடிக்ககூடிய நிலை இருந்தாலும் தேசிய கட்சிகளின் குணமறிந்து தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சமயோசிதமான சித்தந்தத்தை பின்பற்றியே தந்தரமாக ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார். ஜெயலலிதா சற்று வித்தியாசமாக தனது துணிச்சலான ஆளுமையை முன்னிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார், அவர்களுடைய ஆளுமை மிக்க தகுதி இங்கு எவருக்கும் இல்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தொலைகாட்சி விவாதங்களில் இருந்து ஊடக நேர்காணல்வரை மந்திரி எம் எல் ஏ மற்றும் செய்தி தொடர்பாளர்கள் ஆளாளுக்கு கருத்து மாறுபட பேசிக்கொண்டிருக்கின்றனர்,

அரசியலில் எவரும் புனிதர் இல்லை ஊழல்வாதிகள்தான் என்றாலும் பன்னீர்செல்வம் ஒருவர் மட்டுமே இப்போதைக்கு அதிமுக கட்சியில் மக்கள் விரும்பக்கூடியவராக காணப்படுகிறார். மீதமுள்ள நான்கு ஆண்டுகால ஆட்சியை நகர்த்தி தத்தமது பதவிகளை காத்துக்கொள்ளவேண்டும் என்பதே இப்போதைக்கு பதவியிலிருப்பவர்களின் விருப்பமாக இருக்கும்.

ஒருவேளை கட்சி ஒன்றுபட்டு ஆட்சி தொடர்ந்தாலும் கட்டுப்படுத்த எவரும் இல்லாததால் வரலாறு காணாத ஊழலும் நிர்வாக சீர்கேடுகளும் இடம்பெறும்.

சசிகலா அல்லது தினகரன் கட்சி தலைமை பொறுப்பை கையுள் வைத்திருந்தால் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும், அப்படி அவர்கள் கட்சியை வழிநடத்த முயன்றால் மக்கள் செல்வாக்கு முற்றாக அடிபட்டு போவது தவிர்க்க முடியாமல் போகும்.

இணையவிருக்கும் பன்னீர்செல்வம் தினகரன் சசிகலா போன்றோரை ஒதுக்கி வைக்க எதிரணியினர் எடுத்த முடிவு தனது தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என முழங்கியதுடன் தன்னை மிகப்பெரிய சக்தியாக கருதிக்கொண்டிருக்கிறார், இதனால் அவர் முதல்வர் பதவிக்கு அடம்பிடிக்கக்கூடும், ஒருவேளை பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக ஆக்கப்படலாம் என்ற வாக்குறுதி வழங்கப்படலாம்.

பொதுச்செயலாளராக தற்போது சசிகலா இருந்துகொண்டிருக்கிறார் சசிகலாவை வெளியேற்ற முடியுமா என்றதும் இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி
தினகரன் இன்னும் ஒருபடி அதிகமாகி நான் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து நேற்றைக்கே ஒதுங்கிவிட்டேன் துணை பொதுச்செயலாளர் பதவி சின்னம்மாவால் வழங்கப்பட்டது நான் பதவியிலிருப்பது இல்லாமலிருப்பது சின்னம்மாவின் முடிவு என்றும் கூறியிருக்கிறார், இருந்தும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் பங்குபற்றுபவர்கள் எடப்பாடி அணிக்குள் தினகரன் இருப்பதாகவே யுத்தம் செய்து விவாதிக்கின்றனர்.

அதிமுகவுக்குள் உண்டான சலசலப்பு முடிவுக்கு வராத தொடர்கதையாகவே இருக்கும் என்றே கள நிலவரம் இடித்துரைக்கிறது அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை பன்னீர்செல்வத்துக்கே ஆபத்தாக மாறிவருகிறது.

சுருக்கமாக பார்த்தால் பாஜக சொல்லுவதுபோல அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கரைந்துகொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்