தமிழ்நாடு ஒரு அரசியற் புரட்சிக்கு தயாராகிவிட்டது.

மொத்த தமிழகமும் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பாதிப்புக்குள்ளான விவசாயிகள் சார்பாக தமிழக விவசாயிகளின் சங்கத் தலைவர் திரு ஐயாக்கண்ணு தலைமையில் இந்திய தலைநகர் டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இரண்டு வாரங்களாக கோவணத்தை கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக நின்று எலியை தின்று தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி இந்திய மத்திய அரசுக்கு எதிராக ஒரு நூதனமான போராட்டத்தை தொடர் போராட்டமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளின் போராட்டமானது சனநாயக முறைமைக்குட்பட்ட உரிமை சார்ந்த போராட்டமாக இருந்தாலும் தமிழர்களின் போராட்டம் என்பதால் சனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு இந்தியாவை ஆட்சிசெய்யும் இந்துத்துவா பாஸிஸ மத்திய அரசு தமிழர்களின் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

மத்திய அரசின் தரப்பிலிருந்து இதுவரை ஒருவர்கூட போராட்டக்காரர்களை திரும்பி பார்க்கவில்லை. ஒருவேளை நாளை பொலீஸ் தடியடிமூலம் போராட்டகாரர்கள் அடித்து விரப்படவும் கூடும்.

விவசாயிகள் தமது கோரிக்கைகளாக, முக்கியமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரியின் நீர் மேலாண்மையை தமிழக விவசாயத்திற்கு உறுதி செய்யவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், பட்டுப்போன பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்று பல்வேறு நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசை நோக்கி வைத்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் வரலாறு காணாதவகையில் நூற்று நார்ப்பது வருடங்கள் இல்லாத வறட்சி இப்போது உண்டாகி, வெப்பம் அதிகரித்து விவசாயம் முற்று முழுதாக எரிந்து பட்டுப்போய் விட்டது. அதற்கான புள்ளி விபரங்கள் ஆவணங்களாக மத்திய-மாநில அரசுகள் திரட்டி வைத்திருப்பதாக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் வழக்கறிஞரான ஐயாக்கண்ணு ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய தமிழக அரசு தனது கணக்குக்கு சில கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு ஆர் கே நகர் இடை தேர்தலில் வெற்றிபெற்று தமது அரசியல் வீரியத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காகவும் உடைந்துபோன கட்சியை தூக்கி நிறுத்தவேண்டும் என்பதற்கான கவலையில் வேறு திசையில் போராடிக்கொண்டு இருக்கிறது.

சல்லிக்கட்டு என்ற முன்னெடுப்புடன் மெரீனாவில் நடந்த புரட்சிக்குப்பின்னர் உண்டான நெடுவாசல் ஹைட்ரோகார்பன் வாயு அகழ்வுக்கான எதிர்நிலை போராட்டம். பத்துநாட்களுக்கு மேலாக நெடுவாசலில் நடந்தது,

நிலமை மோசமாவதை கவனித்த மத்திய அரசு, அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் உட்பட மத்திய அரசு சார்ந்தவர்களை களமிறக்கி ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடப்படுவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு நெடுவாசல் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இருந்தும் மத்திய அரசாங்கமானது மக்கள் எதிர்ப்பை உதாசீனப்படுத்திவிட்டு 27/03/2017 அன்று புதுக்கோட்டை நெடுவாசல் என்ற இடத்தில் திரும்பவும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு சனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகார போக்குடன் தன்முனைப்பாக டெல்லியில் கையெழுத்தாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில், பூமிக்கு அடியில் ஹைட்ரோகார்பன் எடுக்க கர்நாடகாவின் ஜெம் ஆய்வக நிறுவனத்துக்கும், காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்க பாரத் ரிசோர்ஸ் நிறுவனத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்து.

விவசாய நிலமாக இருக்கும் நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு எதிராக போராட்டம் வெடித்தது எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய- மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், டெல்லியில் கையெழுத்தானது. அனைத்து ஒப்பந்தங்களிலும் பெட்ரோலியத்துறை சார்பில் உயரதிகாரி ராஜேஷ் மிஸ்ரா கையெழுத்திட்டிருக்கிறார்

ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக மக்களிடம் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவோம்” என்று சர்வாதிகாரத்தனமாக தலை சுற்றும் வகையிலான பதில் ஒன்றை கூறியிருக்கிறார்

பின்னணி என்னவாயிருக்கும் என்று ஆராய்ந்தால் ஜெயலலிதா மறைவுடன் தமிழக அரசு செத்த பாம்பாகிவிட்டது எதிர்த்து கேள்வி எழுப்ப ஆளில்லை, அதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது.

பலவீனப்பட்டுப்போய் இருக்கும் தமிழக பழனிச்சாமி அரசை கரைத்து காரியத்தை சாதித்துவிடலாம் என்று மத்திய மோடி அரசு நம்பியிருப்பதாக தெரிகிறது. அதற்கு தமிழக அரசு கட்டுப்படவில்லையென்றால் சசிகலா, தினகரன் போன்றோர் சம்பந்தமான வழக்குகள் அல்லது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்களை கூர் தீட்டி காரியத்தை சாதிக்கலாம் என்று மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இதை உணர்ந்துகொண்ட அதிமுகவின் சசிகலா அணியின் துணை பொதுச்செயலாளர் ரிரிவி தினகரன் பாஜக சார்பாக எந்த எதிர்வினையையும் வெளிக்காட்டவேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளையும் ஊடக பேச்சாளர்களையும் கேட்டு கட்டளை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.

இந்திய அளவில் தமிழகம் தவிர மற்ற மானிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் செய்வதற்கான வெளி ஒன்று தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி ஒதுங்குவதற்கு கூட இடமில்லை என்பதாகவே நிலமை இருக்கிறது,

மாறி மாறி திராவிடக்கட்சிகளையே தமிழகத்து மக்கள் ஆட்சி செய்ய தகுதியானவர்களாக தொடர்ந்து தெரிவு செய்துவருகின்றனர். அடுத்த அடுத்த நிலைகளை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய கட்சிகளாக பாட்டாளி மக்கள் கட்சி, நாம்தமிழர், மதிமுக போன்ற கட்சிகள் தற்போதைக்கு ஆட்சியை பிடிக்காவிட்டாலும் தமிழகத்தின் உருத்துடைய கட்சிகளாக ஊடகங்களாலும் மக்களாலும் ஏற்புடையவை என்பதாகவே அரவணைக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் உண்டாகியிருக்கும் வெற்றிடத்தை குறுக்கு வழியில் தமதாக்கிக்கொள்ள போர்க்கால அடிப்படையில் அவசரகால நிலையை உண்டாக்கக்கூடிய காரணங்களை வலிந்து தோற்றுவித்தாவது சசிகலா அரசை இல்லாமல் செய்யக்கூடிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் திறந்த உரிமையை பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷா அவர்களும் தமிழக பிரிவு பாஜக வினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது,

பக்க உதவியாக அவ்வப்போது எடுத்து கொடுப்பதற்கு சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இன்று ஆகக்கூடிய தமிழ் விரோத சர்வாதிகார செயற்பாட்டாளர்களாக , பாஜகவின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச் ராசா, மற்றும் வானதி சீனிவாசன் இல கணேசன் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பாஜகவின் ஊடக செயற்பாட்டு பேச்சாளர்களும் செயற்பட்டு வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து வெளியேறி போட்டி கிளை அமைத்து அரசியல் செய்துவரும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் அவர்களுடைய பலவீனத்தையும் பாஜக மிக சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறது. பன்னீர்செல்வம் பிரிவினரும் அதை ஏற்று தமக்கு சாதகமாக்கி அரசியல் செய்வதாகவே தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய நிகழ்வாக இருக்கட்டும் சசிகலாவை சிறைசெல்ல காரணமான உச்ச நீதிமன்ற தீர்ப்பாக இருக்கட்டும். இரட்டை இலையின் சாயலை ஒத்த இரட்டை மின் விளக்கு சின்னம் வழங்கியதாக இருக்கட்டும் அனைத்திலுமே பாஜகவின் நிழல் கரங்கள் செயலாற்றுகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.

இப்படியான செயற்பாடுகளால் அதிமுக கட்சியை நிரந்தரமாக இரண்டாக பிளந்து நெருக்கடி நிலையை தோற்றுவித்து ஈற்றில் தமிழ்நாடு ஜனாதிபதி ஆட்சியை நோக்கி விரைவில் தள்ளப்படும் அபாயம் இருப்பதை ஒவ்வொரு நிகழ்வுகளும் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.

அதிமுக கட்சிக்குள் உண்டாகியிருக்கும் அசாதாரண நிலை, ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், பன்னீர்செல்வத்தின் பிரிவு, சசிகலாவின் சிறைவாசம் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டிருந்த தினகரனின் மீழ் நுழைவு அனைத்தும் அதிமுகவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் பெருத்த குறுக்கு சுவர் எழுப்பப்பட்டது போன்ற சங்கடங்களை தோற்றுவித்திருக்கிறது.

அவைகளுடன் ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரண்பாடான மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழகத்துள் வலிந்து புகுத்தி மக்கள் மத்தியில் தமிழக அரசுக்கு அவப்பெயரை இட்டுத்தரவல்ல காரியங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது. இதன்காரணமாக நடக்கவிருக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் திமுக கட்சியே வெற்றிபெறும் நிலை மேலோங்கி நிற்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அரசு இயந்திரம் முற்றாக செயலிழந்து ஒவ்வொரு தேவைக்கும் மக்கள் வீதிக்குவந்து போராடும் நிலையே உருவாகி இருக்கிறது.

மோடியின் செல்லாக்காசு போராட்டம், சல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழகமக்கள் அனைவரும் தமக்கான அரசு என்று ஒன்றிருக்கிறது என்ற நிலை மறந்து தமது தேவைகளுக்கு போராட்டங்களே வழி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இது ஒரு அசாதாரணமான வித்தியாசமான நிலை என்பதையும், அரசியற் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஆரம்பமாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2016 மே நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் ஆயத்தமானபோது அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் சக்தி தோன்றவேண்டுமென்று மக்கள் மன்றத்தில் பெரு முனைப்பு பரவலாக துளிர்விட்டிருந்தது என்பது மிக வீரியமாக அறியப்பட்டிருந்தது.

அப்போது தோற்றம் பெற்றிருந்த மக்கள் நல கூட்டணி என்ற கூட்டு அமைப்பு மாற்று சக்தியாக அமையும் என்றும் பெருவாரியான மக்களால் கூர்மையாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துகொண்ட விஜயகாந்த் அவர்களின் உறுதி இல்லாத காலதாமதம், திமுகவுடன் அவர் நடத்திக்குண்டிருந்த பேரம் பேசல் மற்றும் அவரது உடல்நல கோளாறு அதனால் அவர் மேடைகளில் நடந்துகொண்ட முறை,

வைகோவின் கோமாளித்தனமான பேச்சுக்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் கூட்டணி அமைக்க பல இடங்களுக்கு அலைந்து ஜெயலலிதாவிடம் பேரம் படியாமல் கொள்கையற்று கையறு நிலையில் இறுதியில் மக்கள்நல கூட்டணியில் இணைந்த நிகழ்வு அனைத்தும் மக்களுக்கு வெறுப்பை ஊட்டியது.

ஈற்றில் மாற்று சக்திகள் என்ற மனநிலை மக்கள் மன்றத்தில் அடிபட்டு போனதுடன் திமுக என்ற கொடுங்கோல் மீண்டும் வரக்கூடாது என்ற ஒற்றை எண்ணத்தில் மக்கள் ஜெயலலிதா தலைமையாக கொண்ட அதிமுகவுக்கே வாக்களித்தனர்.

கடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிக்கொண்டதானது கருணாநிதி குழுமம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பது தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. அதேபோல திமுக வலுவான எதிர்க்கட்சியாக வந்ததற்கான காரணம் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பது தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

மக்கள்நல கூட்டணியின் உறுதியற்ற தன்மை அக் கட்சி கரைந்துபோக காரணமாக அமைந்தது.

சரியான ஒரு மாற்று தலைமை ஒன்று இனங்காணப்படும்வரை தமிழகத்தில் அதிமுக திமுக என்ற வாய்ப்பாடே கணக்கு செய்வதற்கு உதவிக்கொண்டிருக்கும் என்பது மாறப்போவதில்லை.

மக்கள் நல கூட்டணியை தோற்றுவிக்க பாடுபட்டவரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் காலத்தின்போதும் மாறி மாறி ஒரு எம் எல் ஏ பதவிக்காக சந்தற்பவாத அரசியல் செய்துவந்தவராகவே தமிழகத்தில் அறியப்பட்டள்ளார்,

கரைந்துபோன மதிமு கட்சியை திடப்படுத்திவிடலாம் என்ற கனவோடு மநகூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகி நகைப்புக்கிடமாகி போனவராக வைகோ கணிக்கப்படுகிறார்.

உணர்ச்சி வசப்படுவத்தால் இருந்த செல்வாக்கை இழந்த விஜயகாந்த் அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவே மக்கள் பார்க்க தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இடதுசாரிகள் தாமும் அரசியலில் இருப்பதாக காட்டிக்கொள்ள திராவிட கட்சிகளின் அழைப்புக்காக காத்திருக்கும் கட்சிகள் என்பதே வரலாறு.

பரிகாசத்துக்கும் பரிதாபத்திற்கும் உள்ளாகியிருக்கும் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். மூப்பனாரின் மகன் என்பது தவிர வேறு முகவரி வாசனுக்கு இல்லை.

இவர்கள் அனைவரும் வருங்காலங்களில் பேயருக்கு அரசியல் செய்யலாமே தவிர வெற்றி அவர்களை நோக்கி ஒருபோதும் திரும்பப்போவதில்லை.

அதிமுகவின் சசிகலா அணி உடைந்து சுக்குநூறாகிப்போயிருந்தாலும் ஊடகங்கள் ஓரளவுக்கு அதிமுக அணிகளை தூக்கி நிறுத்தவே முயலுகின்றன. திமுக கட்சியை துண்டற மக்கள் வெறுத்திருந்தாலும் அக்கட்சியின் நீண்டகால அமைப்பு ரீதியான பலத்தை அக்கட்சி நம்புகிறது. அதே காரணிகளை கருத்தில்க்கொண்டுதான் ஊடகங்கள் அந்த இரண்டு கட்சிகளையும் பிரதானப்படுத்தி வருகின்றன.

மாற்று அரசியல் சக்தி ஒன்று உருவாகி வருவதுபோன்ற மாயையை உருவாக்கியிருந்த மக்கள்நலக்கூட்டணியின் படுதோல்வி, மாற்று அரசியல் சக்தி ஒன்று தமிழகத்தில் இனி தலையெடுக்க முடியாது என்ற கருத்தாக்கத்தை மீண்டும் தோற்றுவித்திருக்கிறது.

பாஜக கனவுலகில் அரசியல் செய்யலாமே தவிர தமிழகத்தில் அரசியல் செய்ய உளவியல் ரீதியான எதிர்ப்புக்கள் புத்துயிர் பெறுவதாகவே களநிலவரம் இடித்துரைக்கிறது.

தமிழக மக்களை பொறுத்தவரை 90% மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். இருந்தும் கடவுள் மறுப்பு என்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட திராவிட கட்சிகளால் ஐம்பது ஆண்டுகளை தாண்டியும் அரசியல் செய்ய முடிகிறது. இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் கடவுள் நம்பிக்கையை 100% முன்னிலைப்படுத்தும் பாஜ கட்சியை 01% கூட தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஏன் தமிழகத்தில் இன்னொரு சக்தி தலையெடுக்க முடியவில்லை என்பது பெரும் கேள்வியாகவே இருந்து வந்த நிலையில் மோடி அரசின் தமிழர் விரோத கோட்பாடும் திராவிட கட்சிகளின் ஊழல் அலங்கோலங்களும் புதிய ஒரு மாற்று தலைமையை நோக்கிய தேடலை நோக்கி உந்த தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தின் கள யதார்த்தமும் அரசியல் வெற்றிடத்தின் அளவும் நாம்தமிழர் கட்சிக்கு மிக பொருத்தமாக இருந்தாலும் இன்னும் அந்த கட்சி கட்டமைப்பு ரீதியாக பலப்படவேண்டிய தேவையும் ஊடகங்களின் வெளிச்சமும் தேவைப்படுகிறது. அவைகளை பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் விரும்பியோ விரும்பாமலோ சினிமா பின்புலமே கைகொடுக்கும் என்ற கசப்பான உண்மையை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

தமிழக வரலாற்றில் சினிமாதான் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்திருக்கிறது. சீமானை எடுத்துக்கொண்டாலும் அவர் சினிமாவிலிருந்து வந்திருக்காவிட்டால் இவ்வளவு வெளிச்சம் அவர்மீது பட்டிருக்க வாய்ப்பில்லை.

தெலுங்கிலிருந்து வந்த கருணாநிதி, மலயாளத்திலிருந்து வந்த எம்ஜீ ஆர், கன்னடத்திலிருந்து வந்த ஜெயலலிதா, அரசியலிலும். இன்னும்பல தமிழகத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் சினிமாவிலும் கொடிகட்டி பறக்கும்போது சீமான் ஒன்றும் குறைவானவர் இல்லை.

இன்று மறைமுகமாக பல தளங்களில் நின்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை வரவேற்கும் சமுத்திரக்கனி, தாங்கர்பச்சான், அமீர் போன்றவர்கள் சமீபத்தில் நடந்த மக்கள் போராட்டங்கள் மூலமாக ஓரளவு மனிதாபிமானவர்கள் என அறியப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இன்னும் கொஞ்சம் எட்டி அடியெடுத்து வைத்து நாம் தமிழர் கட்சியின் வெளிச்சத்துக்கு வந்தால் இருதலை கொள்ளி எறும்பாக, மதிலில்மேல் பூனையாக சப்பாணியாக, ஊமைகளாக இருக்கும் மக்கள் ஒருவேளை இறங்கி வரக்கூடும்.

மக்கள் பலகாரத்தை மட்டுமல்ல சிலுசிலுப்பையும் விரும்புவது யதார்த்தமே.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்