வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை!

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என்றும், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, “வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்கமுடியாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள். போலியான ஒரு தீர்வை நாம் எப்போதும் ஏற்கப்போவதில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்க நடைமுறைகளை வெற்றிகரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக, சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும் பிழையான, தேவையற்ற அச்சங்களை நீக்குமுகமாக இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் , சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல” என்றும் சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்