ஈழத்தமிழர் அரசியல் யதார்த்தம் எது ? – பிரதமர் வி.ருத்ரகுமாரன் கருத்து !

தற்போதய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை நிலையாகச் சிக்கவைக்கும் முயற்சிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமைகள் துணைபோவதை நாம் வேதனையுடன் அவதானிக்கிறோம். தமிழர்களை அடிமைப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை வேண்டிக் கொள்கிறோம்» இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கே ‘யதார்த்தம்’ என்ற சொல்லாடல் சமாகாலத்தில் தமிழ்சமூகத்தின் மத்தியில் உச்சரிக்கப்படுகின்ற ஒரு பேசு சொல்லாக மாறியுள்ளது.

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் ‘தமிழீழம்’ ,’போராட்டம்’ பற்றி பேசுபவர்களை ‘யதார்த்தம்’ புரியாதவர்கள் என்று ஒரு தரப்பினர் கூறுவதும், இலங்கைத்தீவில் இருந்து ‘தமிழ் தேசியம்’ பற்றி பேசுபவர்களை யதார்த்தம் புரியாமல் ‘அரசியல் செய்கின்றார்கள்’ என்ற கூறுபவர்களும் காணப்படுகின்றனர்

இங்கே ‘யதார்த்தம்’ என்பதனை எந்த புள்ளியில் இருந்து நோக்குகின்றார்கள் என்பதில்தான் அதன் ‘உண்மை’ உள்ளது.

அந்தவகையில் இங்கே ‘யதார்த்த’ அரசியல் பேசுபவர்கள் எந்த நோக்குநிலையில் இருந்து பேசுகின்றார்கள் என்பதனைப் புரிந்து கொள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் கனடாவில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் ‘யதார்த்தம்’ பற்றிய சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ‘தமிழீழமக்களின் தாயகப் பிரதேசத்தையும், தமிழர்தம் வாழ்வினையும் சிங்களதேசம் ஆக்கிரமித்து நிற்கிறது. இலங்கைத்தீவு ஒரே அரசாகவும் ஒற்றையாட்சி அரசாகவும் பிரித்தானியர்களால் மாற்றப்பட்ட பின்னர், பிரித்தானியரின் புவிசார் அரசியல் அணுகுமுறையும், சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரமும் ஒருங்கே இணைந்துகொள்ள ‘சுதந்திரத்தின்’ பின்னர் சிங்கள் தேசத்தின் மேலாண்மைக்குள் இலங்கைத்தீவு சிக்கிக் கொண்டது.

சிங்களதேசம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டமையினைத்தான் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையாக நாம் கொள்ள வேண்டும். சிங்கள தேசத்தின் மேலாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகளை பிரித்தானியர் இலங்கைத்தீவினை விட்டு வெளியேறும் காலத்திலேயே தமிழர் தலைமைகள் நிரகரித்திருக்கவேண்டும். தமிழர் இறைமையினைத் தமிழர்களிடமே விட்டுச் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கவேண்டும்.

ஆனால், அன்றையதமிழர் தலைமைகள் தமிழர் தேசத்தை, தமிழர் தாயகத்தை தமிழர்களின் இறைமைக்குரிய பகுதியாக நோக்காது முழு இலங்கைத்தீவுக்கு உட்பட்டதாகவும், இலங்கையர் என்ற ஒரு பொதுமக்கள்கூட்டத்துக்குரியதாகவும் அணுகினர். இது கொழும்புடன் பிணைக்கப்பட்ட அவர்களது அரசியல் நலன்களோடும்,தூரநோக்குப் பார்வையின்மையினோடும் தொடர்புபட்டதாக அமைந்தது.
சிங்களதேசத்தின் மேலாண்மைக்கு உட்பட்ட அரசியலமைப்பின் பகுதியாக ஈழத் தமிழர் தேசம் உட்படுத்துப்பட்டபோதே நாம் அரசியல்ரீதியான சுதந்திரத்தை சிங்கள தேசத்திடம் இழந்துவிட்டோம். இதன் தொடர்ச்சியாகவே சிங்களதேசம் தமிழர் தேசத்தை விழுங்கி ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கான தமிழினவழிப்புத் திட்டத்தையும் வகுத்துக் கொண்டது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பையும் தமிழர் தாயகப் பிரதேசம் மீது மேற்கொண்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்திய ஈகமும் வீரமும் நிறைந்த விடுதலைப் போராட்டம் இழந்த தமிழரின் இறைமையினைத் தமிழர் தம் கைகளில் மீளப் பெறும் சாதனையை நிகழ்த்தியது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் நடைமுறை அரசு அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கைத்தீவினை ஒரு அரசாகப் பேணுவதே தமது புவிசார் மற்றும் பூகோள நலன்களுக்கு உகந்தது எனக் கணிப்பிட்ட உலகின் பலமிக்க அரசுகளுடன் சிங்கள அரசு கூட்டுச் சேரந்து நடைமுறைத் தமிழீழ அரசினை சிதைப்பதில் வெற்றிகண்டது.

தற்போதய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை நிலையாகச் சிக்கவைக்கும் முயற்சிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமைகள் துணைபோவதை நாம் வேதனையுடன் அவதானிக்கிறோம். தமிழர்களைஅடிமைப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பத் தலைவர்களை வேண்டிக் கொள்கிறோம்.

எது யதார்த்தம்?

யதாரத்தம் என்பது எமது உண்மையை நிலையை நாம் மதிப்பிட்டுக் கொள்வதாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களின் தாயகப் பகுதியினைச் சிங்களம் ஆக்கிரமித்திருப்பது யதார்த்தம். தமிழர் நிலங்களை சிங்களம் கபளீகரம் செய்வது யதார்த்தம். சிங்கள ஆயுதப்படையினர் தமிழர் தாயகப்பகுதியில் குவிந்திருப்பது யதார்த்தம். இலங்கைத்தீவிணை பௌத்த நாடாக சிங்களம் பேணமுனைவது யதார்த்தம். தமிழர் தேசத்தை சிங்களம் இனவழிப்பு செய்ய முனைவது யதார்த்தம். சிங்களப் பாராளுமன்றத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் உரிமையினைப் பெறமுடியாது என்பது யதார்த்தம்

‘யதார்த்தம்’ பற்றிப் பேசுபவர்களிடம் நான் கோரவிரும்புவது இதுதான். நான் குறிப்பிட்ட யதார்த்தங்களைக் கவனத்தில் எடுங்கள். இந்த யதார்த்தங்களை எவ்வாறு கையாளப் போகிறோம் எனச் சிந்தியுங்கள். இந்த யதார்த்தங்களைக் கையாள அரசியல் அடிமைகளாகும் வழிமுறையினைத் தேர்ந்தெடுக்காதீர்கள். இவ்வாறு நாம் செய்வோமாயின் நாம் இன்றைய தலைமுறைக்கு மட்டுமன்றி எதிர்காலத் தiமுறைக்கும் தவறிழைத்தவர்களாக இருப்போம். துரோகம் செய்தவர்களாக இருப்போம். தயவுசெய்து இந்த அடிமைப்பாதையில் இருந்து சுதந்திர வாழ்வு தேடும் அரசியற் பார்வையைத் தேர்ந்தெடுங்கள்.

தமிழர் தலைவிதி தமிழர் கையில் !

தமிழர் தலைவிதியனைத் தமிழரே தீர்மானிக்க வேண்டும் என்பது ஒருமக்கள் கூட்டத்தின் அரசியல் விருப்பு. இந்த அரசியல் விருப்பினை தமிழ் மக்கள் தமக்காகத்தாமே தான் வெளிப்படுத்தமுடியும். வெளிப்படுத்த வேண்டும். ஒரு மக்கள் கூட்டம் தமது அரசியல் விருப்பினை தெளிவாக, ஒருமித்தவகையில் வெளிப்படுத்துவதுதான் அந்த அரசியல் விருப்பினை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பினை எதிர்காலத்திலாவது வழங்கும். இந்தஅரசியல் விருப்பை நாம் உறுதியாக வெளிப்படுத்தவது நமது தலைமுறைக்கு மட்டுமன்றி எதிர்காலத் தலைமுறையின் அரசியற் செயற்பாட்டுக்கும் அவசியமானதாகும்.’ இவ்வாறு பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்களது கருத்தின் ஒரு பகுதி அமைந்திருந்தது.

இதுதான் தமிழர் தேசத்தின் ‘யதார்த்தம்’ என்ற நிலையில், தமிழர் நலன்சார் புள்ளியில் இருந்து கொண்டுதான் ‘யதார்த்த’ அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

நாதம் ஊடகசேவை

About இலக்கியன்

மறுமொழி இடவும்