புலம்பெயர் தமிழரும் புதிரான வாழ்வும்: ஈழத்தமிழர் வாழ்வியல் சிக்கல்கள் – பொலிகையூர் ரேகா

புலம்பெயர் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அத்தகைய இலக்கியங்களுக்குக் காரணமாயமைந்த காரணிகளையும், புலம்பெயர் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள வாழ்வியல் சிக்கல்களையும் பேச வேண்டியது இன்றியமையாததாகும்.

புலம்பெயர் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அத்தகைய இலக்கியங்களுக்குக் காரணமாயமைந்த காரணிகளையும், புலம்பெயர் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள வாழ்வியல் சிக்கல்களையும் பேச வேண்டியது இன்றியமையாததாகும்.

காலம் காலமாக வேரூன்றி வளர்ந்த மண்ணிலிருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் அந்நிய மண்ணில் துளிர்த்தெழுதல் என்பது சவால் நிறைந்ததாகும்.

சொந்த மண்ணைப் பிரிந்த சோகத்தோடு; அநாதையாக வாழ்ந்து வேற்று நாட்டிலும் அடையாளமற்றவராகப் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் அதிகம்.

அவை பற்றிய ஓர் ஆய்வே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புலம் பெயர்தல்

‘’புலம்பெயர்தல்’’ அல்லது ‘’இடம் பெயர்தல்’’ என்பது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.
பொதுவாக ஒருவரது முன்னோர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே புலம் எனப்பட்டது. அக,புற நெருக்கடிகள் காரணமாக தாம் வாழ்ந்து வந்த இடத்தை விட்டு வேறிடத்திற்குச் சென்று அங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் புலம்பெயர் மக்கள் / ஏதிலிகள் என அழைக்கப்படுகின்றனர்.

புலம்பெயர்தலானது உள்நாட்டிற்குள்ளோ, பிற நாடுகளுக்கோ இடம்பெயர்தலைக் குறிக்கின்றது. புலம்பெயர்தலுக்கான காரணிகள் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து கொண்டுள்ளனர். அதற்குப் பல காரணிகள் இருப்பினும் முக்கியமாகக் கருதப்படுபவை பின்வருமாறு:

உள்நாட்டுப் போர்
அரசியல் காரணங்கள்
மனித உரிமை மீறல்கள்
இயற்கைச் சீற்றங்கள்
கல்வி
பொருளீட்டல்
வேலையின்மை
வறுமை

சங்க இலக்கியங்களில் புலம்பெயர்தல்
“பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய”(சிலம்பு) எனப் புலம்பெயராது ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்த செய்தியைச் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்ததைப்போன்று புலம்பெயர்தலைப்பற்றி முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, புறநானூறு, பட்டினப்பாலை, நற்றினை ஆகியன கூறுகின்றது.

“புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்” என்று வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப்பற்றிப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.

“அவன் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து” என நற்றிணையும், “கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்காள்” எனக் கடலாடு காதையில் இளங்கோவடிகளும், “ஓதல் பகையே துதிவை பிரிவே” எனத் தொல்காப்பியரும் கூறுகின்றார்.

ஈழம் ஓர் அறிமுகம்

இன்றைய காலப் பகுதியில் “இலங்கை” என்று அழைக்கப்படும் தீவானது முற்காலத்தில் “ஈழம்” என்றே அழைக்கப்பட்டது. பழந்தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களில் “ஈழம்”, “ஈழ மண்டலம்” என்ற பெயரே பயன்படுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு பழந்தமிழ் இலக்கியங்களில் “ஈழத்துணவு”, “ஈழத்துப் பூதந்தேவனார்” போன்ற சொல்லாடல்களும் ஈழம் என்பது வரலாற்றோடு தொடர்புடைய பெயர் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.

ஆக்கிரமிப்புகளின் பின்னரான ஈழமானது தமிழர் பகுதி என்ற எல்லைக்குள் குறுகிப்போய் வந்தேறிகளின் ஆட்சிக்குள்ளாகிப்போனது.
ஈழத் தமிழர் இடப்பெயர்வு உலகத் தமிழர் வரலாற்றில் ஈழத் தமிழரின் இடப்பெயர்வு தனித்துவமானதாகும். சிங்களப் பேரினவாதத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்ற அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து புலம்பெயரச் செய்தது.

ஜனநாயகத்திற்குட்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையில்; உரிமை மீட்புப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாறிய பின்னர் பேரினவாத அரசின் கெடுபிடிகளுக்குள் உயிர்வாழ முடியாமல் தமிழர்கள் பிற நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர்.
1983 ஆம் ஆண்டு இனக் கலவரமும், இராணுவத் தாக்குதல்களும், ஆயுதப் போராட்டங்களும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழவேண்டிய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது.

தம் விருப்பத்திற்கு மாறாக, பிறந்த மண்ணிலே வாழ்வதற்கான உத்தரவாதம் எதுவுமற்ற நிலையில் இடப் பெயர்வானது; உள்நாட்டு இடப்பெயர்வாகவும் பிற நாடுகளில் தஞ்சம் புகுதலாயும் அமைந்தது.
உயிர் பிழைத்தலின் பொருட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று இந்தியா, இங்கிலாந்து, நோர்வே, கனடா, அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜேர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்வியல் சிக்கல்கள்

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தாம் இழந்த வீட்டையும் நாட்டையும் உறவுகளையும் எண்ணி வருந்துவதன்றிப் பல இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர்.

ஈழத் தமிழினத்தின் போராட்டத்தின் பின்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:-

ஏதிலி முகாம்கள்
மனநிலை
உணவுப் பழக்கங்கள்
மொழி
காலநிலை
நிறவாதம்
வேலைவாய்ப்பு
ஆளுமைச் சிதைவு
தனிமை
பண்பாட்டுச் சிக்கல்
அடையாளச் சிக்கல்
முரண்கள்
சுரண்டல்கள்
அச்சுறுத்தல்கள்
காழ்ப்புணர்ச்சி
ஏதிலி

பிற நாடுகளுக்கு ஏதிலிகளாகச் செல்பவர்கள் அங்குள்ள அகதி முகாம்களில் தங்க வேண்டியுள்ளது. இச்சூழலில் நிலவும் பாகுபாடுகளும், சட்டதிட்டங்களும் தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதாகவே அமைகின்றது. நிம்மதியாக வாழவேண்டித் தாய்நாட்டைத் துறந்து வந்தவர்கள் இங்கேயும் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்தலென்பது கவலையளிப்பதாகவே அமையும்.

மனநிலை

இயல்பாகவே உயிர்களிடத்திலுள்ள இழந்தது குறித்த ஏக்கமானது பூர்வீக நாட்டையும், புகலிட நாட்டையும் ஒப்புநோக்க வைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

வாழும் நாட்டுச் சூழல் ஒத்துப்போகாத நிலையில் பிறந்தநாட்டு ஏக்கமும், நினைவுகளும் விரக்தியைத் தூண்டுகின்றது.
போர்ச் சூழலிலிருந்து வெளியேறிப் பல காலம் கழிந்துவிட்ட நிலையிலும் பெரும்பாலானோர் அதிலிருந்து வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

உணவுப் பழக்கங்கள்

இது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறிய விடயமாக இருப்பினும் இதுவும் ஒரு இன்னலாகவே புலம்பெயர்ந்தவர்களால் பார்க்கப்படுகின்றது.

நெல்லரிசிச் சோற்றைப் பிரதான உணவாகக் கொண்ட தமிழர்க்கு வெளிநாட்டு உணவுகளின் மேலிருக்கும் மோகம் சிறிது காலத்தில் சலிப்புத் தட்டிவிடும்.

அத்தோடு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியே புலம்பெயர் நாட்டில் வசிப்பவராக இருப்பதாலும் பிறந்த நாட்டு உணவைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்றது.

மொழி

பிறநாட்டின் மொழி தெரியாது அங்கு வாழ்தல் என்பது மிகவும் கொடுமையானது. வெளியில் சென்றால் கேட்கப்படும், பேசப்படும் மொழி விளங்காததாக இருப்பதோடு தெரிந்த சில வார்த்தைகளோடு சமாளிப்பதும், மொழியைக் கற்றுத் தேர்ந்திருப்பினும் மனதில் உள்ளதை உள்ளவாறு தாய்மொழியில் கூறுவதைப்போல வெளிப்படுத்த இயலாமல் வாழ்வதும் வேதனை அளிக்கக் கூடியதாகும்.

வாயிருந்தும் ஊமையாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஒரே ஊரில் வாழும்போது பிரிவினைவாதம் பேசுபவர்கள்கூட வெளிநாட்டில் தமிழ் பேசுபவனைக் கண்டதும் கடவுளைக் கண்டதைப் போன்று மகிழ்கின்றனர். மனதில் இருப்பதைச் சொந்த மொழியில் கூறுவதை போல வேறு மொழியில் பகிர்ந்துகொள்ள முடியாதென்பதே உண்மையாகும்.

பெரியவர்களுக்கு மொழியைக் கற்றல் சிக்கலாய் இருப்பது போல இளைய தலைமுறைக்குத் தாம் சார்ந்து வாழும் நாட்டின் மொழியைக் கற்றல் இலகுவாகவும் தாய் மொழியைக் கற்றல் கடினமாயும் போவதால் தாய்மொழியை எழுத, வாசிக்கத் தெரியாத சமூகமாக மாறிவிடுகின்றனர்.

காலநிலை

வெயில் கொளுத்தும் வெப்பமண்டல நாட்டுக்குச் சொந்தமான தமிழர்கள் உடலை உலுக்கும் குளிர்தேசத்தில் ஊசிமுனைகளாய் ஊடுருவும் குளிருக்கு ஈடுகொடுக்க முடியாமலும், நேர மாற்றத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதிலும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
கடல் கடந்து சென்று கால மாற்றத்துக்கு ஈடு கொடுத்து வாழ்தல் என்பது சவால் நிறைந்ததாகவே உள்ளது.

நிறவாதம்

புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் நிறத்தையும், உருவ அமைப்பையும் கொண்ட தமிழர்கள் நிறவாதம் காரணமாக நிறவெறிச் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். பல இடங்களில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு

வேலை அனுமதிச் சீட்டு இல்லாமையையும் புலம்பெயர்ந்துள்ளமையையும் காரணம்காட்டி பன்னாட்டு நிறுவனங்கள் தகுதியுள்ளவர்களை வேலைக்கு எடுக்காத சூழ்நிலை இந்தியாவில் பல படித்த புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் சிக்கலாகும்.
இதேபோன்று வெளிநாடுகளிலும் தமிழர்கள் பெரும்பாலும் கூலி வேலைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றனர்.

துப்புரவுத் தொழில், உணவகங்களில் பணியாட்களாக என அடிநிலை வேலைகளுக்கே பணியமர்த்தப்படுகின்றனர்.
அதுமட்டுமன்றி குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகின்றது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

ஆளுமைச் சிதைவு

எத்தகைய திறமை இருப்பினும் குடியுரிமை கிடைக்கப்பெறாதாதாலும், மொழிப் பிரச்சனைகளாலும் அதற்கேற்ப வேலைகள் கிடைப்பதில்லை. கிடைத்த வேலையைச் செய்வதற்கு உந்தப்படுகின்றனர்.
தனி மனித ஆளுமையானது வீணாகிப்போவதில் வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு காரணியாகிவிடுகின்றது.

தனிமை

தனிமை என்பது நாமாக எடுத்துக் கொள்ளாவிடின் இனிமையைக் குலைப்பதாகவே அமையும். வேலை நேர மாற்றங்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் முகத்தையே பார்க்க முடியாத சூழலிலும், வயதானவர்களால் தங்கள் பிள்ளைகளின் இயந்திர வாழ்க்கையின் ஓட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும் போவதால் தனிமை கொடுமையாக மாறிவிடுகின்றது.

மொழி தெரியாத நாட்டில், அயலினரிடம் கூட பேச முடியாத நிலையில் நினைவெனும் சிறையில் சிக்கிவிடுகின்றனர். இது தாய்நாடு உள்ளிட்ட பிற ஏக்கங்களை அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

பண்பாட்டுச் சிக்கல்

தமது பண்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்ட அந்நிய மக்கள் மத்தியில் வாழ்வது ஒன்றும் சுலபமானதல்ல. நாம் வழக்கமாகச் செய்யும் சிறு செயல்கள் கூட நம்மை அந்நியப்படுத்திக் காட்டும். நமது பண்பாடுகள்கூட புதுமையாக உற்று நோக்கப்படும். எடுத்துக்காட்டாக நெற்றியில் பொட்டிடும் தமிழ் வழக்கம் அங்கு ஏன் என்ற வினாவுடன்தான் பார்க்கப்படுகின்றது.

ஆடை அணிகலன்களிலிருந்து, கொண்டாடும் பண்டிகைகள் வரையில் வித்தியாசமாகப் பார்க்கப்படுகையில் நமது பண்பாட்டைக் கைவிட்டு அந்நாட்டுச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அவர்கள் விழாக்களில் ஈடுபாடு கொள்ளும் சமூகம் இயல்பாகவே தோன்றிவிடுகின்றது. இது நம் அடையாளங்களைத் தொலைக்க ஒரு காரணியாகிவிடுகின்றது.

அடையாளச் சிக்கல்

ஏதிலியாக வாழும் நாட்டில் உண்மை முகத்தை தொலைத்து வாழவேண்டி உள்ளது. புலம்பெயர் நாட்டில் கடினமின்றி வாழ்வதற்காகப் பல விடயங்களை இழந்து வாழ வேண்டியிருத்தல் சிக்கலான ஒன்றாகும்.
வைக்கும் பெயர்கூட அந்நாட்டு வாழ்க்கையில் இடையூறாக இருத்தல் கூடாதென்றெண்ணி தமிழ்ப் பெயர்களை விடுத்து வாயில் நுழையாத மேலைநாட்டுப் பெயர்களையும், வடவெழுத்துப் பெயர்களையும் வைக்கத் தொடங்கிவிடுகின்றனர்.

புலம்பெயர் நாட்டில் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளத் தம் அடையாளங்களையும் இழக்கத் துணியும் அவல நிலைக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆளாகின்றனர்.

முரண்கள்

புலம்பெயர்ந்து வந்ததன் காரணம் அறியாத இளைய தலைமுறைக்கும், தாய் நாட்டு ஏக்கத்தோடு வாழும் முந்தைய தலைமுறைக்கும் இடையேயான கண்ணோட்டம் மாறுபடுவதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

புகலிட நாட்டின் பழக்கவழக்கங்களால் பெரும்பாலான இளைய தலைமுறையினர் தம் நாட்டுப் பண்பாட்டை மறந்துவிடுகின்றனர்.
பண்பாட்டில் ஊறிப்போன முந்தைய தலைமுறைக்கு இம்முரண்கள் மன உளைச்சலை அளிப்பதாகவே இருக்கின்றது.

சுரண்டல்கள்

வேலையின்மை என்ற சூழ்நிலையில் எந்த வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் மக்களை குறைந்த சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்துதலும், குடியுரிமை பெறாதவர்களுக்கு மிக மிகக் குறைந்த சம்பளம் வழங்குவதுமாக புலம்பெயர் நாட்டில் உழைப்புச் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன.

அச்சுறுத்தல்கள்

தாய்நாட்டோடு ஒப்பிடுகையில் கருத்துச் சுதந்திரம் என்பது புலம்பெயர் நாட்டில் அதிகம் இருப்பினும் அதை புகலிடம் கோரிச் செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.
அப்படிப் பயன்படுத்தி உரிமைகள் பற்றிப் பேசமுற்பட்டால் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அடக்குமுறை காரணமாக தாயகத்தைவிட்டு நீங்கியவர்களுக்கு மீண்டும் அடக்குமுறைகளுக்குள் வாழ்தலென்பது கொடுமை நிறைந்ததாகும்.
இது அவர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த சவாலாகவே அமைகின்றது.

காழ்ப்புணர்ச்சி

புலம்பெயர் நாட்டினரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சியோடே ஏதிலிகளை எதிர்கொள்கின்றனர். தங்கள் நாட்டில் தமக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளையும் வேலை வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்க வந்திருக்கும் எதிரிகளாகவே புலம் பெயர்ந்தவர்களைப் பார்க்கின்றனர். இம் மனநிலை புலம்பெயர்ந்தவர்கள் மீது பலவகையிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றால் புலம்பெயர்ந்தவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

புலம்பெயர் இலக்கியம்

புலம்பெயர் இலக்கியமானது புகலிட இலக்கியம், ஆறாந்திணை இலக்கியம் எனவும் அழைக்கப்பட்டது. போரானது “போர் இலக்கியம்” மற்றும் “புலம்பெயர் இலக்கியம்” என இரு வகையான இலக்கியத்திற்கு காரணமாயமைகின்றது. தம் சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமது தாய் நாடு தொடர்பான நிகழ்வுகள்,வலிகள், ஏக்கங்கள் ஆகியனவற்றையும் புலம் பெயர்தலிலும் புலம்பெயர் நாட்டிலும் சந்திக்கும் இன்னல்களையும் இலக்கியங்களாகப் படைத்தனர். இவையே புலம்பெயர் இலக்கியங்கள் எனப்படுகின்றன.
போரின் கொடுமை, குடும்பங்களின் சிதைவு, உயிரிழப்பு, வெறுமை, ஏக்கம், நினைவுகள் எனப் பலவற்றை வெளிப்படுத்தித் தன்னிரக்கம் நிறைந்தவையாய் வெளிவரும் ஈழத்துத் தமிழ்ப் படைப்புகளை எளிதாகக் கடந்துவிட முடியாது.

நல்ல இலக்கியம் அவலங்களிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பிறக்கின்றன. சொந்த நாட்டில் வாழ்வு மறுக்கப்பட்ட நிலையில் தாம் இழந்துவிட்ட நாட்டையும் உறவுகள் பற்றிய விரக்தியையும், பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்த இவ்விலக்கியங்கள் உதவுகின்றன.
என்னதான் புலம்பெயர் இலக்கியங்கள் உண்மையின் குரலாக இருப்பினும் பலர் உண்மைகளை ஆவணமாக்குவதை விடவும் சந்தைப்படுத்தலிலே முன்னணி வகிக்கின்றனர் என்பதையும் மறுத்துவிட முடியாது.

அதேபோன்று புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்களும் எழுத்தாளர்களும் சரியான முறையில் இனங்கண்டுகொள்ளப்பட்டு முழுதாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும் இலக்கிய உலகில் குறைபாடாய் உள்ளது.

முடிவுரை

புலம்பெயர்தலானது பல காரணிகளின் அடிப்படையில் நிகழ்வதாயினும் புகலிட நாட்டில் புலம்பெயர் சமூகம் சந்திக்கின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை.

இருப்பினும் தங்கள் பண்பாட்டை எப்படியாயினும் கட்டிக்காக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்கள் தாயகத்தின்மேல் கொண்ட ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்துகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் தாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றெண்ணித் தமது அனைத்து முயற்சிகளிலும் எமது அடையாளத்தை நிலைநிறுத்தும் வண்ணம் வளர்ந்துள்ளார்கள் என்பதும் பெருமைக்குரியதாகும்.
அதேபோன்று இளைய சமுதாயமும் பண்பாட்டைக் காக்கும் செயல்களிலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் சாதனைகளிலும் உயர்ந்து செல்வதை எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் தங்களது இன்னல்களையும், கனவுகளையும், தாயகத்தின் நினைவுகளோடு தாம் அடையும் துயர்களையும், புலம்பெயர் நாட்டிலுள்ள தங்கள் வாழ்க்கை நிலையையும், சொந்த நாட்டின் நிகழ்வுகள் குறித்தும் பல்வேறு இலக்கியங்களைப் படைக்கின்றனர்.
இவையே இன்று புலம்பெயர் இலக்கியங்களாக வெளிவருகின்றது. பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்படுவதால் இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியங்களுக்கென்று தனிச் சிறப்புள்ளது.

புலம்பெயர் வாழ்வில் பணம் அதிகம் ஈட்டலாம், மகிழ்ச்சியாக வாழலாம் எனும் நல்வாழ்க்கை போன்ற தோற்றத்தைக் காட்டுவதாக இருப்பினும் உண்மையில் அதிக வலியைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
தாய்நாட்டு நினைவுகளும், நிகழ்வுகளுமே புலம்பெயர் தமிழரை விரட்டிக்கொண்டிருக்கின்றது.

தாய் நாட்டைப் பற்றிய ஏக்கத்தைப்போலவே புகலிட நாட்டின் மீதான எதிர்பார்ப்பும் கனவாகவே போய்க் கொண்டிருப்பதுதான் புலம்பெயர் தமிழர்களின் உண்மை நிலையாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்