திறந்த கையோடு மூடப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதி!

28 ஆண்டுகாலமாக இலங்கை இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த பருத்தித்துறை பொன்னாலை வீதி திறந்த கையோடு மூடப்பட்டுள்ளது.

காலை சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் முடித்து பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச பேரூந்தில் ஏறிய இராணுவத் தளபதிகள் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் ஆகியோர் பயணச்சீட்டை எடுத்துக் கொண்டிருக்கும் போதே பாதை திறப்பு நாடகத்தை நம்பி சென்றிருந்த மக்கள் முண்டியடித்து ஏறியிருந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத இராணுவத் தளபதிகள் சில நிமிட பயணத்தில், மக்களுடன் மக்களாக உயர் இராணுவத் தளபதிகள் பயணம் செய்கிறார்களே என்று வியப்படைந்த(?) எம்மவர்கள் சிலரிற்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் உடனடியாக பேரூந்தை விட்டு இறங்கிவிட்டார்கள்.

தொடர்ந்து தொடர்ந்த பாதை திறப்பு நாடகப் பயணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவிலை அடைந்தது. ஏதோ சாதித்த திருப்தியில்(?) எம்மவர்களும் முருகனை வணங்கி பேரூந்திற்கு திரும்பியிருந்த போதுதான் மீண்டும் ஆரம்பித்த இடம் நோக்கி பயணம் திசைதிருப்பப்பட்டதை தெரிந்துகொண்டார்கள்.

சுமார் 50 கிலோ மீட்டர் பயண அலைச்சல், பாதை திறப்போடு முடிவுக்கு வந்ததாக மகிழ்ச்சியுடன் அதே 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சென்றிருந்தார்கள். ஆனால் பாதை திறப்பு நாடகப் பயணம் ஆரம்பித்த இடத்தை அடைந்ததும் மக்களை வெளியேற்றி கையோடு திறக்கப்பட்ட பாதை உடனடியாகவே மூடப்பட்டது.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக பாதை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த வலி வடக்கு மக்கள் மீண்டும் அதே 50 கிலோ மீட்டர் தூர பயணத்தின் மூலம் திரும்பியிருந்தமை குறிபிடத்தக்கது.

நல்லாட்சியையும் தமிழரசின் வீர பிரதாபங்களையும் இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் வீணர்கள், தேர்தல் முடியவிட்டு முழுமையான பாவனைக்கு திறந்துவிடுவார்கள் என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டது பரிதாபத்திற்குரியது.

தேர்தல் ஆதாயத்திற்காகவும் தமிழரசுக் கட்சியை பிணையெடுக்கவுமாக இந்த பாதை திறப்பு நாடகம் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்!

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்