“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு

“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்” என்ற தலையங்கத்தில், இத்தாலியின் தலைநகர் றோமில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் மாசி 5, 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ஈழத்தமிழர்களுக்கான மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. சிறீலங்கா தனது சுதந்திர தினத்தை 118 நாடுகளில் பெருமெடுப்பில் கொண்டாடிய தருணத்தில், ஐரோப்பாவில் சிங்களவர்கள் அதிகமாக வாழும் இத்தாலியில், சிறீலங்காவின் சுதந்திர தினத்திற்கான எதிர்ப்பை புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்தியதோடு, தமது அரசியல் அபிலாசைகளை இத்தாலியின் முக்கிய அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மத்தியில் தொடரும் இனவழிப்பும் அதற்கான நீதியின் தேவையை உள்ளடக்கிய, பத்து அம்ச கோரிக்கையான “றோம் பிரகடனம் 2018” மூலம் உறுதிப்பட பதிவுசெய்தார்கள்.

ஈழத்தமிழர்கள் ஏழுதசாப்தங்களாக அனுபவிக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் ஆவணங்களை பார்வையிட்ட இத்தாலியின் முக்கிய அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், தாம் இந்த மாநாடு மூலமாக ஈழத்தமிழர்கள் நீண்ட காலமாக இனவழிப்பை எதிர்நோக்குவதை தெளிவாக உணர்வதாக அறிவித்ததுடன் மட்டுமல்லாது, எமது அரசியல் அபிலாசைகளுக்காகவும், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கான நீதிக்காவும் தாம் தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாக தமது ஆதரவினை வெளிப்படுத்தினார்கள். அதேவேளை, மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட 10 அம்ச தீர்மானத்தில் கையொப்பமிட்டது மட்டுமல்லாது நடைமுறைப்படுத்துவதற்கு தம்மால் இயலுமான அனைத்து வழிவகைகளிலும் ஈழத்தமிழர்களுக்கு துணைபுரிய தயாராக இருப்பதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டதன் மூலம் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பகுதியான ஈழத்தமிழரின் குரலாக இந்த “றோம் பிரகடனம் 2018” இருந்ததென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கும் மேலாக, இத்தாலியில் பிறந்த இளம் தமிழர் பலர் மாநாடு ஒழங்கமைப்பில் கலந்து கொண்டு மும்மொழிகளிலும் மொழிமாற்றம் செய்ய உதவிவழங்கியதன் மூலம், புலம் பெயர்தமிழர்கள் எமது விடுதலை வேணவாவை உயர்போடு வைத்திருப்பது மட்டுமல்லாது, தாயகத்தில் எமது மக்களுக்கு நீதிகிடைத்து அவர்கள் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வாழும்வரை எமது போராட்டம் ஓயாது என்ற முக்கிய செய்தியை சிறிலங்காவுக்கும் அதன் சில அடிவருடி நாடுகளுக்கும் இடித்துரைப்பதாக இந்த மாநாடு அமைந்தது.

றோம் தீர்மானம் – பிப்ரவரி 05, 2018

1. சிறிலங்கா அரசினால் ஈழத்தமிழர்களுக்கெதிராக எழுபது ஆண்டுகளாக கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கு, சிறீலங்கா அரசின் நீதித்துறைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் அப்பாற்பட்டு, ஐநாவின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

2. ஆயிரக்கணக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினறர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. எனவே இவை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். காணாமல் போனவர்கள் பலர் உயிருடன் இருக்கலாம்; அவர்களைக் கண்டுபிடித்தல் வேண்டும். உயிருடன் இல்லாதவர்களுக்கு அவர்களின் சொந்தங்களுக்கு தகுந்த நியாயமான இழப்பீடு வழங்கப்படல் வேண்டும். இவை தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஐ.நா. வினால் உடனடியாகத் திறக்கப்படல் வேண்டும்.

3. வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்களின் வதிவிடங்களில் குண்டுவீச்சி இனவழிப்புச் செய்தபோது சிறிலங்கா இராணுவத்திலும் அரசாங்கத்திலும் கட்டளை இடுவதற்குப் பொறுப்பாக இருந்தவர்களை மனித உரிமை மன்றின் பரிந்துரையின் மூலம் ஐநா பாதுகாப்புச்சபையின் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

4. இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிக்கப்படுவது தான். அதாவது தேசத்தைத் தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலை, பண்பாடு என்பன அழிக்கப்படுவதே இனப்பிரச்சினையாகும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இவ்வழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.

5. ஈழத்தமிழர் வரலாற்றுரீதியாக தமக்கே உரிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்பதையும், அந்தத் தேசிய இனத்திற்கு பூரணமான சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் ஏற்று, இனப்பிரச்சனைக்கான எந்த ஒரு தீர்வும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான இறைமையை முழுமையாக அங்கீகரிப்பதாக அமையவேண்டும்.

6. சிறீலங்காவின் சுதந்திரத்திற்கு முன்னர் (1948) தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சுதந்திரத்தின் பின் திட்டமிட்டுத் தொடர்ந்தன. இதன் மூலம் தமிழர் தாயகத்தின் கிழக்குப்பகுதி திட்டமிட்டு சூறையாடப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்ட விரோத விவசாயக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், புனித பிரதேசக் குடியேற்றம், பௌத்தர்கள் அல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களையும் விகாரைகளையும் நிறுவுதல், முப்படைப்பண்ணைகளுக்கான குடியேற்றம் என பல வகைகளில் தொடர்ந்தன. பிரதேசத்தின் மக்கள் செறிவை செயற்கையாக மாற்றுவதும், தமிழ் மக்களின் கூட்டிருப்பைச் சிதைப்பதுமே இதன் நோக்கமாகும். கிழக்கில் உருவான குடியேற்றங்கள் இன்று வடக்கையும் சூறையாடுகின்றன. இக்குடியேற்றங்கள் உடனடியாக அகற்றப்படல் வேண்டும். இதற்காக அனைவரும் இணைந்து போராடுவதோடு இதனைத் தடுப்பதற்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றை உருவாக்குதல் வேண்டும்.

7. தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சிஙீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் அகதி முகாம்களில் இருக்க படையினரோ மக்களின் நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். உல்லாச விடுதிகளை நடாத்துகின்றனர். போர் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியும் ஆக்கிரமித்த காணிகளை இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. உடனடியாக அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படல் வேண்டும். தனியார் காணிகளில் இருந்து வெளியேறி அரச காணிகளில் படையினர் குடியேறும் போக்கும் இடம்பெறுகின்றது. அரச காணிகள் மக்களின் பொதுத் தேவைகளுக்குரியவை. உடனடியாக அனைத்துக் காணிகளிலிருந்தும் படையினர் வெளியேற வேண்டும்.

8. மூன்று தசாப்பங்களாக நடைபெற்ற போர் முடிவடைந்ததிலிருந்து, தமிழர்கள் போரால் இழந்த தங்கள் சொந்தங்களை சுதந்திரமாக நினைவுகூருவதோ அல்லது நிரந்தரமான நினைவிடம் அமைக்கப்படுவவோ சிறீலங்கா அரசால் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது. போரில் உயிர்நீத்தவர்களின் சமாதிகளை தகர்த்து அந்த இடங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகளுக்கான முகாம்கள் கட்டப்படுவது போன்ற சர்வதேச மனிதநேயத்துக்கெதிரான செயல்களை சிறிலங்கா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

9. ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் கொடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) நீக்கி சித்திரவதைகளின் ஊடாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

10. சிறீலங்கா அரசியல் யாப்பின் 6ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு, தமிழ்மக்கள் எத்தகைய அரசியல் தீர்வை விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஐ.நாவின் தலைமையில் தமிழர்களின் மரபுவழித் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய அகதிமுகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களிடையையேயும், புலம்பெயர் ஈழத்தமிழரிடையேயும் (ஏனெனில் அவர்கள் தங்கள் விருப்புக்கெதிராக பலவந்தமாக நாட்டிலிருந்து துரத்தப்பட்டவர்கள் என்பதினால்) நடத்தப்படவேண்டும்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்