எனக்கு எதுகுமே தெரியாது – சிராந்தி ராஜபக்‌ஷ

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாஜூதீன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும், சிராந்தி ராஜபக்சவின் கீழ் இருந்த சிரிரிய சவிய அறக்கட்டளைக்கு சொந்தமான டிபென்டர் வாகனம் தொடர்பான விசாரணைக்கு நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

அவருடன் மகிந்த ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.

இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு வெளியே மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இரண்டரை மணிநேரம் சிராந்தி ராஜபக்சவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எழுப்பிய கேள்விகளுக்கு சிராந்தி பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டிருந்தார்.

சில கேள்விகளுக்கு மாத்திரம் தனக்கு ஒன்றும் தெரியாது என்று பதிலளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக சில உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது என்றும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்