கமலுடன் கூட்டணி இல்லை – ரஜினி தெரிவிப்பு!

நடிகர் ரஜினியை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், நடிகர் கமல், நேற்று திடீரென சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ”கமலுடன் கூட்டணி இல்லை; சினிமா போல, அரசியலிலும், இருவரது பாணியும் வெவ்வேறாகவே இருக்கும்,” என, ரஜினி உறுதிப்படுத்தினார்.

இருவரது சந்திப்பின் போது, திராவிட கட்சிகளை ஓரங்கட்டுவது குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில், இரு வேறு உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள், ரஜினி, கமல். தற்போது, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தமிழக அரசியல் களத்தில் பயணிக்கவும், இருவரும் ஆயத்தமாகி உள்ளனர். பெப்., 21ல், கமல், தன் அரசியல் கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். அன்று முதல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தையும் ஆரம்பிகிறார்.

இந்நிலையில் நேற்று காலை, தன் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளித்த கமல், மதியம், போயஸ் கார்டனில் உள்ள, நடிகர் ரஜினியின் இல்லத்திற்கு சென்றார். இருவரும், 30 நிமிடங்கள் பேசினர். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரின் சந்திப்புக்கு பின், கமல் கூறுகையில், ”எங்கள் இருவருக்கும், 40 ஆண்டு கால நட்பு உள்ளது. என் அரசியல் பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க, ரஜினிக்கு அழைப்பு விடுத்தேன். பங்கேற்பது அவரது விருப்பம்; வற்புறுத்த முடியாது,” என்றார்.

சந்திப்பு குறித்து, ரஜினி கூறுகையில்:

மக்களுக்கு நல்லது செய்யவே, கமல் அரசியலில் இறங்கியுள்ளார்; பணம், புகழுக்காக வரவில்லை. அவரது அரசியல் பயணத்திற்கு, என் வாழ்த்துக்கள்; ஆண்டவன் ஆசிர்வாதம், அவருக்கு கிடைக்க வேண்டும். இந்த சந்திப்பு, நட்பு ரீதியானது மட்டுமே. சினிமாவில், எங்கள் இருவரது பாணியும் வெவ்வேறாக இருந்தது. அதேபோல, அரசியலிலும் எங்கள் பாணி, வேறுவேறு விதமாக இருக்கும் என அவர் கூறினார்.

இதற்கிடையில், ரஜினி, கமல் சந்திப்பின் போது, திராவிட கட்சிகளை ஓரங்கட்டுவது குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரஜினி ஆதரவாளர்கள் கூறியதாவது:

கமல் தொடங்கும் கட்சி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளது. இதுகுறித்த, தன் விருப்பத்தை, ரஜினிடம் தெரிவித்தார். அதற்கு ரஜினி, வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றும், தமிழக அரசியலில், புதிய மாற்றத்தை உருவாக்குவது குறித்தும், இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில், கமல் கட்சிக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை பொறுத்தும், சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், சட்டசபை தேர்தலில், ரஜினியும், கமலும் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்து உள்ளனர். அதுவரை, தங்கள் பாணியில், தனியாகவே செயல்பட முடிவுசெய்து உள்ளனர் என அவர்கள் கூறினர்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கு, மகளுடன் சென்று, நேற்று சாமி தரிசனம் செய்த நடிகை, கவுதமி கூறுகையில், ”ரஜினி, கமல் இருவரும், இன்னும் அரசியல் கட்சி மற்றும் கொள்கை குறித்து, எதுவும் அறிவிக்கவில்லை. அவற்றை அறிவித்தால் தான், ஆதரவு குறித்து கூற முடியும். இப்போதைக்கு, இருவருக்கும் ஆதரவு கிடையாது,” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்