சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

பெப்ரவரி 2018ல் வெளியான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசு இன்னமும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கத் தயாராக இல்லை என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளை மாற்று வழிகளைத் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பெப்ரவரி 2018 UNHRC Report A/HRC/37/23 அறிக்கையின் படி சிறிலங்காவில் இனப்படுகொலைக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகின்ற தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான முன்னெடுப்புகள் நம்பகமற்ற தன்மையையே தொடர்ந்தும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது. இதையே கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழர்கள் உலகிற்கு அம்பலப்படுத்த முற்பட்டுள்ளார்கள். ஆகையால், சிறிலங்காத் தீவில் இருந்து தமிழர்களை இல்லாதொழிக்க முயற்சிக்கும் அடக்குமுறையாளர்களிடம் இருந்தே நீதி வழங்கப்பட வேண்டுமென உலக நாடுகள் தமிழர்களை தொடர்ந்தும் வற்புறுத்திக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கின்றது. இந்த அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்களை உற்றுநோக்கினால், ‘சுழற்சியாக ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் படுமோசமான வன்முறைகள், படுகொலைகள் என்பன தமிழர்களுக்கு நடைபெறும் அநீதியைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக, கபடத்தனமாக அரசியலைத் திறமையாகக்கையாளுதல், மற்றும் வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான தகவல் பரிமாற்றங்கள் ஆகியவை,’ தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விடயங்களாகிய, ‘தொடர்ச்சியாகக் கூறப்படும் முக்கிய குற்றச்சாட்டுக்களாக சித்திரவதை, இராணுவக் கண்காணிப்பு, நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் மந்தகதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வைப் பெற எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் போதுமான முன்னேற்றமின்மை. சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டம் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான முக்கிய பகுதிகளை எதிர்மறையாகக் கொண்டிருக்கிறது.’இது சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். 2015 ம் ஆண்டு, இந்த மோசமான சட்டத்தை அகற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை சிறிலங்கா தானே வழிமொழிந்து ஐக்கிய நாடுகள் சபையில் உறுதி வழங்கி இருந்தது.

சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்தபடி இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றவில்லை. சிறிலங்கா அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகளில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபை மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் சிறிலங்கா அரசிற்கு உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு வழங்கியது. மாறாக, சிறிலங்கா அரசு தான் அளித்த உத்தரவாதம் மற்றும் பொறுப்புக்களைப் புறக்கணித்து தொடர்ச்சியாத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை சிறிலங்கா அரசு உறவினர்களுக்கும் சொந்தங்களுக்கும் வழங்க மறுத்து வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இரவு பகலாக எந்தத் தீர்வும் இன்றி கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவத்தால் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட தமிழர்களின் சொந்த நிலங்கள் இன்றுவரை உரியவர்களிடம் கையளிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையையும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு மிகச்சிறிய பகுதி காணிகளை மட்டும் விடுவித்திருந்தாலும், காணிகள் மீளளிக்கப்படு முன் மக்களின் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக இடித்து அழித்ததுடன் குடிநீர்க் கிணறுகள் குப்பைகளால் நிரப்பப்பட்டுமிருந்தன. இத்தகைய செயற்பாடுகள் தமிழர்களின் மீதான இனவாத மற்றும் இனவெறிக்கு அடையாளமாகக் கூறலாம்.

சிறிலங்கா அரசின் கடந்தகால பதிவுகளை மனதில் வைத்து, அங்கத்துவ நாடுகளை நாங்கள் கோரும் விடயங்களாவன:

• சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலைகளைத் தடுக்க சிறிலங்காவில் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தர பணிமனைகளை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும்.

• மனித உரிமைகள் சபையால் கொடுக்கப்பட்ட மூன்று வருட கால அவகாசத்தைத் தவறான முறையில் முன்னெடுத்துச் சென்றதற்காக சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவி சிறிலங்கா விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கி நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

• சிறிலங்காவைக் கட்டாயப்படுத்தி ரோம் சாசனத்தில் கையெழுத்திடச் செய்யவேண்டும்.

• போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் புரிந்த சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையூடாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும்.

• தமிழ்த் தேசத்தின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கான பரிகாரம் நீதி வழங்குவதற்கான ஒரே வழியாக அமையும்.

• 1948 ல் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த உரிமையை அடிப்படையாகக் கொண்ட, தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலும் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஐநா மேற்பார்வையில் நடாத்தப்பட வேண்டும்.

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

About இலக்கியன்

மறுமொழி இடவும்