யாழ்.நகர உணவக சோற்றுப்பாசலில் புழுக்கள்

யாழ்.நகரப் பகுதியில் உள்ள உணவகத்தில் இருந்து பொது மகன் ஒருவர் வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த அவர் அது தொடர்பில் சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் நேற்று(28) மதியம் சோற்றுப்பாசலை வாங்கிச்சென்றுள்ளனர். பின்னர் அலுவலகத்துக்கு சென்று அங்கு உணவை உண்ணுவதற்காக சோற்றுப்பாசலை விரித்த போது சோற்றினுள் இருந்த இறைச்சியினுள் புழுக்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் சோற்றுப்பாசலை எடுத்துக்கொண்டு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் முறையிட சென்றுள்ளனர். அங்கிருந்த அதிகாரி ஒருவர், இந்த விடயங்கள் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தான் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்து அங்கு சென்று முறையிடுமாறு கூறியுள்ளார்.

உடனடியாக நல்லூர் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்ற இளைஞர்கள் அங்கு சம்பவத்தை கூறியுள்ளனர், அங்கிருந்த அதிகாரி ஒருவர், இங்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுச்சுகாதர பரிசோதகர்கள் எவரும் இல்லை அவர்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு சென்று விட்டனர் நீங்கள் யாழ் மாநகரசபை ஆணையாளரை சந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆணையாளரை தேடிச்சென்ற இளைஞர்கள் அங்கு ஆணையாளர் இல்லாத காரணத்தினால் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரை சந்தித்து விடயத்தை தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக சுகாதார துறையினர் தான் கையாள வேண்டும் நாமும் இதை பற்றி தெரியப்படுத்துகிறோம் நீங்கள் அங்கு சென்று தான் முறையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இறுதி முயற்சியாக மீண்டும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு வந்த இளைஞர்கள் விடயத்தை கூறியுள்ளனர், அங்கிரிந்தவர்கள் இவ் விடயம் நீதிமன்றுக்கு சென்றால் நீங்கள் தான் வரவேண்டும் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அதிகார தொணியில் தெரிவித்ததுடன், பண்ணையில் உள்ள சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர்கள் ஒரு சோற்றுப்பாசலில் உள்ள சுகாதார சீர்கேட்டை உரிய முறையில் கையாள தெரியாத நீங்கள் ஏன் சுகாதார துறையினர் என இருக்கிறீர்கள், பொதுமக்கள் எங்கு போய் முறையிடுவது ஒவ்வொருவரும் ஏனையவர்களிடம் பொறுப்பை பந்தாடிவிட்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள், என காரசாரமான வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றுள்ளனர்.

சாப்பாட்டில் இவ்வாறான சீர்கேடு இருப்பது மிகப்பெரிய பாரதூரமான விடயம் ஆகும் இதை கூட கண்டு கொள்ளாமல் சுகாதாரத்துறையினர் இருப்பது வேதனை அளிக்கிறது. எம்மாலான முயற்சிகளை செய்தோம் பயனளிக்கவில்லை. உணவக முதலாளியிடம் போய் எம்மால் சண்டையிட முடியாது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கோள்ள சுகாதார துறையினருக்கு அறிவிக்க மாத்திரமே எம்மால் முடியும் நாம் அறிவித்த நேரத்தில் குறித்த உணவகத்திற்கு வந்து சோதனை செய்திருந்தால் நேரடியாக பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.

கண்ணூடாக பார்த்திருக்க முடியும் நடவடிக்கையும் எடுத்திருக்க முடியும் ஆனால் சுகாதார துறையினரின் அசண்டையீனம் எம்மை வெறுப்படைய செய்துள்ளது அவர்களும் இந்த நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு துரோகம் இளைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்