மனித உரிமைகள் விடையத்தில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம்

சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில், கடந்த 27ஆம் நாள் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது ஒரு முக்கியமான தருணமாகும். ஆனால் அது முதற்படி மாத்திரமே.

பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியில் உள்ளனர். உண்மையான நல்லிணக்கம் அடையப்பட வேண்டும்.

மேலதிக அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில், பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கனடாவின் எதிர்பார்ப்பை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.

தெளிவான காலஅட்டவணை மற்றும் மூலோபாயத்துக்கு ஏற்ப தமது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், சிறிலங்கா மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்றும் நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்