மீண்டும் ஈபிடிபியிடம் சரணடையும் கூட்டமைப்பினர்!

வவுனியா நகரசபையில் யார் ஆட்சியமைப்பதென்ற பேரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை நேற்று குறிப்பிட்டோம். இன்றுவரையான அதன் மேலதிக தகவல்களை குறிப்பிடுகிறோம்.

வவுனியா நகரசபையை கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவு கட்டாயமானதென்பதால், ஐ.தே.க தலைமையிடம் சுமந்திரன் நேரடியாக பேசியுள்ளார். இதையடுத்து, வவுனியா நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும்படி ஐ.தே.க தலைமை தமது உறுப்பினர்களிற்கு நேரடியாக உத்தரவிட்டுள்ளது.

நகரசபையில் ஐ.தே.கவிற்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். தலைமையின் உத்தரவு கிடைத்தாலும், இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே த.தே.கூ ஐ ஆதரிப்பார்கள் என தெரிகிறது. மிகுதி இருவரும் ரிசாட் பதியுதீனின் ஆட்கள். தலையால் நடந்தாலும், அவர்களை த.தே.கூ பக்கம் எடுக்க முடியாதென வவுனியா த.தே.கூ வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்த நிலையில், வவுனியாவில் ஆட்சியமைப்பதெனில் த.தே.கூட்டமைப்பிற்கு இன்னும் ஒரேயொரு ஆசனம் மட்டுமே தேவை. நகரசபையில் உதயசூரியன் 3 ஆசனங்களையும், ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி 1 ஆசனத்தையும் வைத்துள்ளன.

த.தே.கூ ஐ ஆதரிப்பதெனில் சிவசக்தி ஆனந்தன் நேற்று சில நிபந்தனைகளை வைத்திருந்ததை வெளியிட்டிருந்தோம். நேற்றிரவு புதிதாக இன்னுமொரு நிபந்தனையும் விதித்திருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மூன்றினதும் தலைவர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சந்தித்து பேச வேண்டுமென்பதே அது.

வவுனியாவில் இந்த பேச்சுக்களை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் ப.சத்தியலிங்கம். கூட்டமைப்பின் தலைவர்களை எப்படியாவது ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களுடன் பேச வைத்து, வவுனியா நகரசபையை கைப்பற்றி விட வேண்டுமென அவர் விரும்புகிறார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கு விசயத்தை சொல்ல- அவர்கள் சந்திப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், சந்திப்பிற்கு முன்னதாக, கூட்டமைப்பின் தலைவர்கள் மூவரும் ஒன்றாக உட்கார்ந்து பேச வேண்டுமென அவர் திட்டமிட்டுள்ளார். அனேகமாக நாளை காலைக்கு பின்னர் இந்த சந்திப்பு நடக்கும். ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் பேசுவதா இல்லையா என்பதை நாளை காலை முடிவு செய்வார்கள்.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இந்தளவு நிபந்தனைகளையும் நிறைவேற்றி ஆதரவு பெறுவதை விட, ஆட்சியை பிடிக்க இன்னொரு வழியும் உள்ளதை தமிழரசுக்கட்சி பரிசீலனையில் எடுத்துள்ளது. அது, ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் ஆதரவு பெறுவது.

ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி தலைமையுடன் பேச வேண்டும், ஆனால் எப்படி பேசுவதென்ற சங்கடத்தில் தற்போது தமிழரசுக்கட்சி தலைமையுள்ளது. ஏற்கனவே நெடுந்தீவில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் காலைவாரிய நிலையில், எப்படி இனி ஆதரவு கோருவதென மாவை நேற்றிரவு கட்சி முக்கியஸ்தர்களுடன் சங்கடப்பட்டு பேசினார்.

இதையடுத்து, தமிழரசுக்கட்சி நேரில் பேசாமல்- பொது அமைப்பின் பிரதிநிதியொருவர் மூலம் இன்று ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளனர். இதில் நெடுந்தீவில் என்ன நடந்ததென்பதற்கான விளக்கத்தையும் தமிழரசுக்கட்சி குறிப்பிட்டுள்ளது. “நெடுந்தீவில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி ஆட்சியமைப்பதையே நானும் (மாவை), சுமந்திரனும் விரும்பினோம். அதில் தலையிடுவதில்லையென்றுதான் இருந்தோம். ஆனால் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக நடந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்“ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு என்னவென்பதை உறுதிசெய்ய முடியவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்