கோத்தாவே பொருத்தமான வேட்பாளர் – ஜோன் செனிவிரத்ன

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து விட்டு, அண்மையில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன, தாம் அரசாங்கத்தில் இருந்து விலகிய போதும், கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கோத்தாபய ராஜபக்சவும் பங்கேற்ற நிகழ்விலேயே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதன்போது,அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் விருப்பம் உள்ளதாக என்று கோத்தாபய ராஜபக்சவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், இதுபற்றித் தாம் முடிவெடுக்கவில்லை என்றும், இந்த விடயம் தொடர்பாக தமது சகோதரர் மகிந்த ராஜபக்ச முடிவெடுத்த பின்னர் தாம் முடிவெடுக்கவிருப்பதாகவும், பதிலளித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, மைத்திரிபால சிறிசேனவே பொருத்தமான வேட்பாளர் என்று அந்தக் கட்சியின் செயலர் துமிந்த திசநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர ஆகியோர் கருத்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்