இளைஞர் சக்தி என்பது தீக்குச்சி போன்றது! – மூத்த போராளிகள் அறிக்கை

மே 18. தமிழினப் படுகொலை நாள் குறித்த விடயங்களில் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பல்வேறு அம்சங்களுடாக இனங்காட்டிய அனைவருக்கும் எமது நன்றிகள். எமது எதிர்பார்ப்புகளிற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். என்று மூத்த போராளிகளான பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு, முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் – திருமலை) ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது

குறிப்பாக உலக அரங்கில் இறுதிப் போரில் நிகழ்ந்தவை இனப்படுகொலையே என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து தாம் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்த வடக்கு முதல்வருக்கு எமது மனமார்ந்த நன்றியை மீண்டும் வெளிப்படுத்துகிறோம்.

யுத்தம் முடிவுற்ற வேளை முன்னாள் போராளியொருவரே கிழக்கின் முதல்வராகப் பதவி வகித்தார். 2009 மே 18 வரைஉயிர் பறிக்கப்பட்ட தம்மை இழந்த பலரை அவருக்கு நேரடியாகத் தெரியும். அதற்கு அடுத்ததாக அமைந்த மாகாண சபையின் ஆயுட்காலத்தின் பிற்பகுதியில் தமிழரின் பிரதான கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. எனினும் இனப்படுகொலை என்ற விடயத்தை இந்த இரு தரப்பும் துணிச்சலாக வெளிப்படுத்தத் தயாராக இருந்திருக்கவில்லை.

இந்த வகையில் தான் நாம் வடமாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தின் கனதியை அறிந்து கொள்ளமுடியும்.

மேலும் இவ்வருட நினைவு நிகழ்வு தொடர்பாக நாம் மூவரும் விடுத்த வேண்டுகோளை மதித்து தமது உச்சக் கட்ட பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் வெளிப்படுத்தியதோடு தமது சக்திக்கு அப்பாலும் சென்று நிகழ்வுக்கான பங்காளராகப் பல தரப்பினரையும் ஈடுபடுத்திய வடக்கு முதல்வருக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் நன்றிகள்.

அவரது உரையினை ஆழமாக நோக்குபவர்கள் தமிழ் மக்களின் உணர்வையும் அவர் எழுப்பும் கேள்வியையும் எதிர்பார்ப்பையும் உணர்ந்து கொள்வர். எது எவ்வாறாயிருந்தாலும் இன்றைய யுகத்தில் இளைய தலைமுறையினரை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்ல ஆயிரம் வழிகள் உள்ளன. ஆயினும் சாத்தியமான அளவில் எமது வேண்டுகோளை ஏற்றதுடன் தமது இனப்பற்றையும் வெளிப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் எமது நன்றிகள்.

இன்றைய உலக ஒழுங்கு நடைமுறைபோன்ற விடயங்க;டாக அதனை வெளிப்படுத்தினர் மாணவர்கள். ‘போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலட்சியம் மாறாது” என சுதுமலையில் தலைவர் தெரிவித்த கருத்தினை வலியுறுத்துவதாக இளைஞர் எழுச்சியை நாம் காண்கிறோம்.

இளைஞர் சக்தி என்பது தீக்குச்சி போன்றது. அதனைக் கொண்டு சுடரேற்றவும் முடியும், வீட்டைக் கொளுத்தவும் முடியும். நாம் சுடரேற்றுவதையே விரும்பினோம். இரண்டாவது அம்சத்தை செயல்படுத்த தலைகீழாக நின்ற சக்திகளை எமது மக்கள் மிக நன்றாகவே அறிவர். எனவே அந்த விடயத்தை மக்களிடமே விட்டுவிடுவோம்.

எதிர்காலத்தில் மதகுருமார் தலைமையிலான நினைவேந்தல் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற எமது எதிர்பார்ப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக வட கிழக்கிலுள்ள சகல பொது அமைப்புக்களுடனும் தொடர்பினை ஏற்படுத்த முனைந்து வருகின்றோம். குறிப்பாக கிழக்கு மற்றும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாணவர் ஒன்றியத்தின் அதிகூடிய பங்களிப்பு இதில் இருப்பது விரும்பத்தக்கது.

இதேவேளை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தொடர்பாக கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று முகமாக கல்விச் செயற்பாடு பாதிக்கக்கூடாது என தந்தையர்கள் என்ற நிலையில் இருக்கும் நாம் விரும்புகிறோம்.

எமது எதிர்பார்ப்புகளிற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். என்றுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்