ஒரு கிண்ணம் தேநீரின் விடுதலைஅரசியல் – தலைவரின் பார்வையில்!! சச முத்து

உற்சாகத்துக்கா அருந்தும் ஒரு கோப்பை தேநீரில் இருக்கும் விடுதலை அரசியலை தலைவர் எப்படி புரியவைத்தார் என்பதை சொல்லும் ஒரு சம்பவம் இது

1983 மே 18ம்திகதி சிறீலங்காஅரசு தனது தமிழர்களின்மீதான ஆளுமையை உலகுக்கு காட்ட எண்ணி வடக்கின் மாநகர நகரசபை தேர்தல்களை நடாத்த முடிவு செய்தது.யாழ் மாநகரசபைக்கும் சாவகச்சேரி பருத்தித்துறை வல்வெட்டித்துறை நகரசபைகளுக்குமான தேர்தல் அது.

28 உறுப்பினர்களே அமைப்பில் அப்போது இருந்த நிலையில் தலைவர் ஒரு முடிவை எடுக்கிறார்.இந்த தேர்தலை நிராகரிக்கும்படி எமது மக்களிடம் கேட்பது என்று.

இன்று நினைத்தாலும் மலைப்பாகவும் பெரு வியப்பாகவும் இருக்கிறது. முப்படைகளையும் பெரிய ஒரு அரசையும் வைத்திருந்து அவர்களின் துணையுடன் நடாத்தப்படும் ஒரு தேர்தலை நிராகரிக்கும் முடிவை எப்படி தலைவர் எடுத்தார் என.

வெறுமனே தீர்மானத்தை எடுத்து அதனை அறிவித்துவிட்டு ஓய்ந்து கிடக்கும் ஒரு மனிதரல்ல அவர்.அதற்கான கடின உழைப்பை 24மணிநேரமும் ஓய்வின்றி தரும் ஒரு தலைவர் அவர்.ஆனால் அது அல்ல பிரச்சனை தமிழீழவிடுதலைப்புலிகளினால் தேர்தலை நிராகரிக்க விடுக்கப்பட்ட வேண்டு கோளை எமது மக்கள் ஏற்காது விட்டு 51 வீதமான மக்கள் வாக்களித்தால் எமது விடுதலைப்போராட்டமே கேள்விக்குறியாகும் அபாயமும் இருந்தது.

எமது அமைப்பில் பல முன்ணணி போராளிகள் இதனை பற்றி தமது சந்தேகங்களை, தயக்கத்தை வெளியிட்டார்கள்.தலைவர் எமது மக்களில் மிக நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஆழமாக இறங்கி எமது மக்களிம் வேலை செய்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு.
இங்கேதான் அப்போது இருந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் ஒரு பண்பை குறிப்பிட்டே ஆகவேணும்.முடிவு பற்றி தமக்குள் மிக பலமாக விவாதிப்பார்கள். பல பொழுதுகளில் மிக நீண்ட விவாதங்களாக நாட் கணக்கில்கூட இடம் மாறி இடம் மாறி நடைபெறும்.முடிவுக்கு பதிலாக A1, B1 ,B2 என்ற முடிவுகளை பரிசீலனை செய்ய அழுத்தம் கொடுப்பார்கள். ஆனால் விவாத முடிவில் தலைமை எடுக்கும் முடிவுக்காக அதன்பிறகு உயிரையும் தந்து உழைப்பார்கள்.

இறுதியாக தலைவர் தனது முடிவை அறிவிக்கிறார். 1983 மே மாதம் 18ம்திகதி நடைபெற உள்ள யாழ் மாவட்ட உள்ளுராட்சி தேர்தலை எமது அமைப்பு நிராகரிப்பதுடன் மக்களையும் அந்த தேர்தலை நிராகரிக்கும்படி கேட்பது என்றும் முடிவெடுத்தார்.
அதற்கு அடுத்த சில நாட்களில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் இலட்சினையுடன்கூடிய துண்டுப்பிரசுரம் எமது அமைப்பால் பகிரங்கமாக விநியோகிக்கப்படுகிறது.

தேர்தலை நிராகரிக்கும்படி அந்த துண்டுபிரசுரத்தில் எமது அமைப்பு கேட்டிருந்தது. துண்டுப்பிரசுரத்தின் வலது கீழ் முனையில் அரசியல்குழு தமிழீழவிடுதலைப்புலிகள் என்றும் இடது கீழ் முனையில் வே பிரபாகரன் தலைவர் தமிழீழவிடுதலைப்புலிகள் என்றும் இருந்தது அந்த துண்டுபிரசுரம்.

அப்போது அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த 28பேரும் தலைவர் உட்பட அனைவரும் ஒவ்வொரு பிரதேசத்தில் துண்டுபிரசுரங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சாவச்சேரி நுணாவில் பகுதியில் தலைவர், லாலாரஞ்சன், புலேந்திரன் போன்றோர் துண்டுபிரசுரம் வழங்கினர்.

நானும் விசுவும் (அரவிந்தன் என்ற பெயர் கொண்ட இவர் பின்னர் அமைப்பின் புலனாய்வுபிரிவின் முக்கியமான ஒருவராக இருந்து கொழும்பில் அமிர்தலிங்கம் அழிப்பில் வீரமரணமானவர்) நீர்வேலி கோப்பாய் அச்சுவேலி ஆவரங்கால் சிறுப்பிட்டி பகுதிகளில் வழங்கினோம்.

சரி தேர்தலை பகிஸ்கரிக்கும்படி மக்களை கேட்டுவிட்டோம்.இனி மக்களுக்கு வீடுவீடாக சென்று விளக்கம் தரவேணும். அரசியலை புரியவைக்க வேணும்.மக்களின் பலத்தில், அதன் அபரிமிதமான மக்கள் சக்தியில் தலைவருக்கு எப்போதுமே நம்பிக்கை. மக்களுக்கு ஒரு விடயத்தை புரிய வைத்து விட்டால் எமது மக்கள் எம்முடன் திரள்வார்கள் என்பதே அவரது கோட்பாடு.

அமைப்பின் போராளிகளை அழைத்து எப்படி மக்களுடன் கதைப்பது என்று விளக்கங்கள் தருகிறார். முழு உறுப்பினர்களும் இந்த வேலையில் இறங்கியே ஆக வேண்டும் என்று கடுமையான உத்தரவும் சொல்கிறார்.
அந்த நேரத்தில் திடீரென ஒரு கேள்வியை கேட்கிறார். “”எத்தனை பேர் தேநீர் குடிப்பதில்லை”” என்று கேட்கிறார்
அந்த நேரத்தில் அதிகமான தமிழீழவிடுதலைப்புலி உறுப்பினர்கள் தேநீர் குடிப்பதில்லை.தலைவர் ஒரு உத்தரவை அப்போது சொல்கிறார். ‘ நீங்கள் தேநீர் குடிக்காதவர்களாக இருந்தாலும்கூட எமது மக்களின் வீடுகளுக்கு ,குடிசைகளுக்கு செல்லும்போது அவர்கள் தரும் தேநீரை குடித்தே ஆக வேண்டும்’ என்று.

பல உறுப்பினர்கள் உடனே குரலைஉயர்த்தி ‘ அது எப்படி முடியும் நாம்தான் தேநீர் குடிப்பதை நிறுத்தி வருடங்களாகி விட்டனவே.. இப்போது ஏன் மக்கள் தரும் தேநீரை குடிக்க வேணும் என்று கேட்கிறார்கள்.தம்மால் மீண்டும் தேநீர் குடிப்பதை நினைத்தே பாhக்க முடியாது இருப்பதாக சில உறுப்பினர்கள் பொங்கித் தீர்த்தார்கள் .

எல்லாவற்றையும் கேட்ட தலைவர் முடிவை முன்பை விடஅழுத்தமாக சொல்கிறார் ..அவர் சொன்னது இதுதான்.
///எமது மக்கள் அதிலும் யாழ்குடா மக்கள் ஆழமான சாதிப்பிரிவுகளால் அதி மோசமான உயர்வு எண்ணத்தாலும் அதே நேரத்தில் காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்வுமனப்பான்மையிலும் மூழ்கி இருக்கிறார்கள்… இப்போது.அவர்களின் வீடுகளுக்கு செல்பவர்களுக்கு அவர்கள் அன்புடன் வழங்கும் தேநீரை நீங்கள் குடிக்க மறுத்தால் நீங்கள் அவர்களையே நிராகரிப்பதாகவே நினைப்பார்கள்.

அந்த மக்களின் குடிசைகளில் அவர்கள் அன்புடன் தரும் தேநீரை குடிக்க மறுத்துவிட்டு நீங்கள் சொல்லும் எந்த அரசியல் விடுதலை கருத்தும் அவர்களை தொடாது..அந்த குடிசை மக்கள் தரும் தேநீரை நீங்கள் கட்டாயம் குடித்தே ஆக வேண்டும் // என்று தலைவர் சொன்ன போதுதான் ஒரு கோப்பை தேநீருக்குள் இத்தனை அரசியலும் இருக்கிறது என்பதை புரிய முடிந்தது.

இதனை எமக்கு சொல்லும் போது அந்த 1983ல் அவருக்கு வயது 29. .. தனது மக்களை எவ்வளவு தூரம் ஆழமாக உண்மையாக அவர் நேசிக்கும் ஒருவனுக்கே அந்த மக்களின் ஒவ்வொரு அசைவு பற்றியும் ஆழமான புரிதலும் அது பற்றிய உளவியல் தெளிவும் இருக்க முடியும்.

பிரபாகரம் அல்லது பிரபாகரனியம் அல்லது பிரவாகம் அல்லது பிரபாரத்துவம் என்பது வேறு எதுவுமே அல்ல.. மக்களை நேசிக்கும் அரசியல்…மக்களின் விடுதலைக்கான பயணமே அது..
இனி வரும் பல பத்து ஆண்டுகளுக்கும் அதுவே வழிகாட்டும்.

ச.ச.முத்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்