வடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும் – அனந்தி சசிதரன்

வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை யுத்தம் தோற்றிவித்துள்ளது. யுத்தத்தினை மேற்கொண்ட அரசு அவர்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் காலப்போக்கில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கென கொள்கை வரைவு தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தொடர்ந்து பேசுகையில்: சாதாரன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விட இம் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். போரின் காரணமாக மீள எழும்ப முடியாதவர்களாகவும் அவர்களுடைய குடும்பங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாததாகவும் வறுமை அதிகரித்த வண்ணமே சென்று கொண்டிருக்கிறது.

பல மாணவர்கள், பெண்கள் இன்று தம் அவயவங்களில் செல் துண்டுகளை சுமந்த வண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது பிற்காலங்களில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. இது பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை. சுருக்கமாக யுத்தம் என்ற ஒன்றை வெற்றிகரமாக முடித்து, உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்று சாதாரனமாகக் கூறுகின்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை, இனி ஏற்படப்போகும் விளைவுகளை சிந்திக்கவில்லை. இவ் கொடூர யுத்தம் எம் இனத்தின் வீரியத்தை, எம் சந்ததியின் உரிமைகளை மற்றும் வளர்ச்சியை நசுக்கியுள்ளது. இவையெல்லாம் ஆராயப்படவேண்டும்.

வடமாகாணத்திற்கென தனித்துவமான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. உதவிகள் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் இச் செயல் வேதனையளிக்கிறது. ஏனெனில் பிற மாகாணங்களுடன் இவர்களுடைய பிரச்சினைகளை ஒப்பிடமுடியாது. யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட மாகாணத்திலேயே உள்ளனர். ஆயினும் தமக்குரிய தீர்வுகள் எட்டாத நிலையிலும் கூட மாற்றுத்திறனாளிகள் ஓர் தொழிலைச் செய்வோம் எனும் தமது சுய முயற்சி உண்மையிலேயே போற்றக்கூடியது.

எடுத்துக்காட்டாக சாதாரனமாக இயங்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தமது சுயமுயற்சியீடுபட வாகன அனுமதிப் பத்திரத்தை பெற முடியாமலிருக்கின்றனர். இது தொடர்பாக பலரிடம் எடுத்துக்கூறியும் இன்றுவரை மறுக்கப்பட்ட உரிமையாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி மாற்றத்திறனாளிகளின் காணிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. அது அவர்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது. அவர்களுக்கு வழங்கக்கூடிய 3000ரூபா கொடுப்பனவுகள் கூட 3000பேரிற்கே வழங்கப்படுகிறது. அக் கொடுப்பணவு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாத நிலையிலும் இவ் அரசினால் தகுதியான எல்லோருக்கும் வழங்கமுடியாதிருப்பது அவர்கள் நலன் சார்ந்து இவ் அரசு யோசிக்கவில்லை என்ற ஐயத்தை தோற்றிவித்துள்ளது. ஆனால் நிலை மாறுநீதி என்றெல்லாம் கவர்ச்சிகரமாக பேசுகின்றதை விடுத்து மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை, திட்டங்களை இப் பகுதியில் நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து இத் துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரனைகள் கொண்டுவரப்படவேண்டும்.

இன்று வடமாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியுள்ள இக் கொள்கையானது எதிர்காலங்களில் வலுவுள்ளதாக விளங்கும். இது வடமாகாணத்திற்கென தனித்துவமான ஓர் மைல்கல்லாகும். இவர்களது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல திணைக்களங்களினது கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இக் கொள்கை இதன் உருவாக்கத்தில் துணைபுரிந்த அனைவரது கடின உழைப்பு பாராட்டப்படத்தக்கதாகும். இக் கொள்கையானது அமைச்சர் சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின் மாகாண சபையில் அனுமதி பெற்று வடமாகாணத்திற்கென தனித்துவமான கொள்கையாக இது வெளிவரும் எனத் தெரிவித்தார்.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று மதியம் வடமாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றியத்தின் (NPCODA) உத்தியோகத்தர்கள், இக் கொள்கை வகுப்பிற்கு நிதி உதவி வழங்கிய வேல்ட் விஷன் லங்கா (WVL) உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*