கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள்!

இலங்கையில் இடம்பெற்ற 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன என, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தலைமையில், உலகலாவிய ஆரோக்கியம், உலகலாவிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் உப குழு இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆரம்ப உரையை ஆற்றிய ஸ்மித் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன, 25 வருடகால யுத்தம் காரணமாக 100,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கும், சிறுபான்மையான தமிழ் மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன. என்பதற்கு நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி என்பது கண்ணுக்கு தென்படாத ஒரு விடயமாகவே உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என கருதிய போதிலும் தற்பபோதைய அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.” எனவும் ஸ்மித் குற்றம்சாட்டினார்.

நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஒருசில விடயங்களை நிறைவேற்றினார் எனினும் இனக்குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.” எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்