இராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி

இராணுவம் பாவனைக்குதவாத வாகனங்களை பயன்படுத்தி வருவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில், நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்திற்கு சென்று கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை படையினர் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்க உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகனம் தடுப்பு போதுமானதாக இல்லாமையாலேயே இந்த விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு படையினர் பாவணைக்கு உதவாத வாகனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறான வாகனங்களை கடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர்.

குறித்த விபத்தினால் இன்று பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தின் நிலை என்ன. 5 பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் யார் பொறுப்பு கூறப்போகின்றார்கள்.

இதற்காகவே வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்த வருகின்றோம். மீள்குடியேறிய காலம் தொட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இந்த குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

தற்காலிக கொட்டகையில் வாழும் இவர்களிற்கு யார் பாதுகாப்பளிப்பது, இவ்வாறான தகர கொட்டகையில்தான் இவர்கள் வாழ்கின்றனர். இவ்விடம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்