மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்!

தமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ”பழைய பன்னீர்செல்வமாக” வரவேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் மட்டுமில்லாமல், மக்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

”பழைய செல்வமா இருந்திருந்தா என் கை ஓங்குறதுக்கு முன்னாடி உன் கை அதை தடுத்து இருக்கும், நீ பழைய செல்வம் இல்லை, பழைய வேகம் இல்லை. போ இந்த பன்னீர் செல்வம் எங்களுக்கு தேவையில்ல, வரணும் பழைய பன்னீர் செல்வமா வரணும்..” சத்ரியன் படத்தில் விஜயகுமார், விஜயகாந்தை பார்த்து சொல்லும் இந்த வசனத்தை, 70ஸ், 80ஸ், 90ஸ் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அதேபோல்தான் தற்போது நிஜ வாழ்க்கையிலும் விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் போல விஜயகாந்தும் அரசியல் உலகில் பெரிய மாற்றத்தை சினிமாவில் இருந்து வந்து ஏற்படுத்தி உள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து அதில் வென்ற கடைசி தலைவராக கூட இவர் இருக்க வாய்ப்புள்ளது.

விஜயகாந்த் கட்சி தொடங்கிய சமயத்தில், அவருக்கு இருந்த வரவேற்பை கிராமத்தில் வசித்த மக்கள் பார்த்து இருப்பார்கள். அதுவரை வீட்டு சுவற்றில் கோலோச்சி இருந்த சூரியனையும், இலையையும் முந்தி முரசு சின்னம் பல இடங்களில் ஆக்கிரமித்தது. எந்த காரணமும் இன்றி, மக்கள் எதையும் எதிர்பார்க்காமல் விஜயகாந்தை ஆதரிக்க தொடங்கினார்கள். பல கிராமங்களில் இப்போதும் அந்த ஆதரவு அப்படியே இருக்கிறது.

அந்த ஆதரவுதான் அவரை பல இன்னல்களுக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி தலைவராக்கியது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவருக்கு எதிராகவே அமர்ந்து சவால்விட வைத்தது. அதுதான் விஜயகாந்த் அரசியலின் பொற்காலம் என்று கூட கூறலாம். சட்டசபையிலேயே நாக்கை மடித்து, கோபத்தை காட்டி வைரலானார். அதையே பின் ஒரு பேட்டியில் ”இந்த பக்கம் காட்டுனீங்க, அந்த பக்கம் காட்டலையே” என்று வருத்தமாக உண்மை மறைக்கப்பட்டுவிட்டது என்று புலம்பினார்.

ஆனால் அப்போதில் இருந்தே அரசியல் மாற்றமாக பார்க்கப்பட்டவர், மீம் டெம்ப்ளேட் ஆக்கப்பட்டார். இணையம் ஒரு அரசியல்வாதியை எப்படி எல்லாம் முடக்க முடியும் என்று இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் தொடர்ந்து கலாய்க்கப்பட்டு, பல மீம் பேஜ்களில் ஷேர் செய்யப்பட்டு, பல வாட்ஸ் ஆப் குரூப்களில் இவர் காமெடிக்கள் பரப்பப்பட்டு, அரசியல் உலகில், காமெடியனாக மாறிய அவலமும் நடந்தேறியது.

இவரும் அதற்கு தொடர்ந்து தீனி போட்டுக்கொண்டே வந்தார். தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க, தூ என்று பத்திரிக்கையாளர்களை சொன்னது என தொடர்ச்சியாக வைரலானார். உலகம் முழுக்க இவர் செய்த யோகா புகைப்படமும் வைரலானது. அப்போது இவர் வசனத்தை வைத்து உருவாக்கப்பட்ட காமெடிக்கள் இப்போதும் வைரலாக வலம் வருகிறது.

மக்கள் புரிந்து கொண்டார்கள்

ஆனால், மக்கள் இப்போது அரசியலில் இவரின் இன்மையை வெகுவாக உணர்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தமிழக அரசியலில் கொஞ்சமும் கள்ளங்கபடமற்ற அரசியல்வாதி என்று இவரை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். தீவிர அரசியலில் இவர் இல்லாததும், இவரின் மேடை பேச்சுக்கள் இல்லாததும், இவரின் செய்தியாளர் சந்திப்பு இல்லாததும் மக்களை இப்போதுதான் இவரை ”மிஸ் செய்ய” வைத்துள்ளது.

குழந்தை சார் அவர்

இவர் அரசியலில் ஆக்ட்டிவ் இல்லாமல் போனதை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவின் போதுதான் எல்லோரும் உணர்ந்தனர். கருணாநிதிக்காக, எல்லோரும் போல அல்லாமல், மனது உடைந்து பேசிக்கொன்டே இருக்கும்போதே உடைந்து அழுத கேப்டனை பார்த்த போது, எல்லோரும் மனமும் இளகி இருக்கும். அதுவரை லெப்ட் லெக்கை சுவற்றில் வைத்து ரைட் லேக்கை எதிரியின் முகத்தில் வைத்த விஜயகாந்தைதான் மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவரை குழந்தையாக அழுது பார்த்த பலர் மனமுடைந்தனர்.

அதன்பின் அவரை கருணாநிதியின் சமாதியில் பார்த்தவர்கள் இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். நடக்க முடியாமல், கம்பியை பிடித்து நடந்தவரை பார்த்தவர்களுக்கு பெரிய கலக்கமே ஏற்பட்டு இருக்கும். என்னாச்சு அந்த கேப்டனுக்கு என்று எல்லோரும் நினைக்கும் வகையில் உடைந்து போய் இருந்தார். தனது உடல் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மீண்டும் வருவாரா

தேமுதிக கட்சி பணிகளை பெரும்பாலும் அவரது மச்சான் சுதீப்தான் கவனித்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து நிற்கும் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். இது அவரது தொண்டர்களுக்கு பெரிய அளவில் உற்சாகத்தை அளித்துள்ளது.

இப்போதும் காத்திருக்கிறார்கள்

இப்போதும் கூட ஒன்இந்தியா கருத்துக்கணிப்பில் அரசியலில் சிறப்பாக செயல்படும் நடிகர்களில் பெஸ்ட் விஜயகாந்த்தான் என்று 60.93சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். ரஜினி, கமலை எல்லாம் இவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். எல்லா நோய்களையும் எப்போதும் போல லெப்ட் லெக்கில் உதைத்துவிட்டு மீண்டு வருவார் விஜயகாந்த் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி தட்ச் தமிழ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்