எழுவர் விடுதலை, ஆளுநர் என்ன செய்யப்போகிறார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட
ஏழுபேரையும் இந்திய அரசியலமைப்பு உறுப்புரிமை விதி எண் 161 பிரகாரம் தமிழக மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று சட்டப்பிரமாணம் இருப்பத்தாக கூறி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடி முடிவெடுத்து அந்த கோரிக்கையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் கையளித்திருக்கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

சுப்ரீம் கோர்ட்டில் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விதி எண் 161 இன் கீழ் தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம் என்பதாக தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு உட்பட்டவர்கள் நம்பிக்கையான வாதங்களையும் முன் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இருந்தும் ராஜீவ் வழக்கு, எழுவர் விடுதலை சட்டதிட்ட நுணுக்கங்களை கடந்து முற்று முழுதாக அரசியாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதே மிக மிக கசப்பான உண்மையாக இருந்து வருகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கீர்த்தி, மற்றும் தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட வியக்கத்தகு ஆளுமை மற்றும் நடத்தை போன்ற விடயங்கள் இந்திய அரசியல்வாதிகளிடையே மிகப்பெரிய ஈகோ மனநிலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் தோற்றம் பெற்று வளர்ந்திருக்கிறது அந்த ஈகோகூட இங்கு ஆளுமை செய்கிறதோ என்ற ஐயமும் மறுப்பதற்கில்லை.

சட்டப்படி, அல்லது நீதிமன்றத்தின் தன் இயல்பான தீர்மானத்தின்படி ஒரு கருமத்தை முடிவுக்கு கொண்டுவரும் சூழலில் இந்தியா என்றைக்கும் இருந்ததில்லை, பாரதிய ஜனதா கட்சியின் மோடி ஆட்சியின்பின் மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் நீதிமன்றங்கள்கூட சுயமாக இயங்கமுடியாத அரசியல் தலையீடு தலைவிரித்தாடுகிறது.

ஆட்சியாளர்கள் விரும்பியவாறு செயலாற்றவேண்டிய நிலையிலேயேதான் அனைத்து துறைகளும் இந்தியாவில் பணிக்கப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் ஏழுபேருடைய விடுதலை என்பது ஒரு அரசியல் சடுகுடுவாக முடிந்துவிடுமோ என்ற ஐயம் பலமட்டத்திலும் அச்சமடைய வைக்கிறது.

மேற்கூறிய சங்கடங்கள் இருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி பரிவாரங்களுக்கு தெரியாததல்ல, பழனிச்சாமி தனது அரசியல் மைலேஜ்சை சற்று அதிகரிப்பதற்காகவும் மத்திய அரசின்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்ப்பதற்காகவும், சுய தப்பித்தல் காரணமாகவும் அல்லது இதயசுத்தியாகக்கூட எழுவர் விடுதலை சம்பந்தமான பரிந்துரையை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்தளவுக்காவது தமிழக அரசு செய்த முயற்சி பாராட்டத்தக்கதே.
பொறுத்திருந்து பார்ப்போம் காலம்தான் இறுதியை தீர்மானிக்கிறது.

ஈழதேசம் செய்திகளுக்காக –
கனகதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்