மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், ‘மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும், போரில் இறந்தவர்களை மாத்திரமே தமிழ் மக்கள் அஞ்சலிக்க முடியும்’ எனவும் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த நாடு மக்களாட்சி நாடு எனவும், அதனை அமைச்சர் ஒருவர் 5 நட்சத்திர மக்களாட்சி நாடு எனவும் மார்தட்டும் நிலையில் நாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வைத் தடை செய்வது மக்களாட்சி விரோத செயல்.

அதனை இராணுவம் முடிவெடுத்து செயற்படுத்த முனைவது மக்களாட்சிக்கு விரோதமானது. அவ்வாறு இராணுவம்தான் இந்த விடயத்தில் முடிவை எடுக்கும் என்றால் இந்த நாட்டில் தற்போது இடம்பெறுவது இராணுவ ஆட்சிதான்.

மக்களாட்சி இல்லை என்று அறிவியுங்கள். அதன் பின்பு உங்கள் முடிவுகளை நேரடியாக அறிவியுங்கள். இராணுவத் தளபதியே முடிவை எடுக்க முடியும் என்றால் ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்றம் எதற்கு?

முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி உள்ள நிலையில் இராணுவத் தளபதி கூறும் கருத்துக்கு யார் பொறுப்பு? இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வு அனுமதிக்கப்பட முடியாது எனில் கடந்த இரண்டு ஆண்டுகளும் அனுமதித்தமை சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே என்பதனை பகிரங்கமாக இராணுவத் தளபதி ஒப்புக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளும். தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடைப்பாடு மைத்திரி – ரணில் அரசுக்கு உண்டு.

அதனை விடுத்து படையினரைப் பேச விட்டு மக்களை கொதி நிலையாக்கி பின்னர் அதில் விபரீத முடிவுகளுக்கு வழி ஏற்படுத்திய பின்பு தீர்வை வழங்குவதாக எண்ணக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்