மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு இணக்கசபைக்கு மாற்றம்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இணக்க சபையில் முறைப்பாட்டாளரும் எதிரியும் இணக்கப்பாட்டுக்கு வராவிடின் வழக்கை வரும் நவம்பர் 14ஆம் திகதி விளக்கத்துக்கு நியமிப்பதாகவும் நீதிமன்று கட்டளை வழங்கியது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 486ஆம் பிரிவின் கீழ் ஆள் ஒருவரை அச்சுறுத்தியதாக சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார்.

எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையானார். அவர் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் முற்பட்டார்.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் முறைப்பாட்டாளரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் மற்றும் எதிரியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோரை இணக்க சபைக்குச் சென்று இணக்கப்பாட்டுச் செல்வது தொடர்பில் ஆலோசிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இரு தரப்பும் இணக்கப்பாட்டு வராவிடின் வழக்கை வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு விளக்கத்துக்கு நியமிப்பதாக நீதிவான் கட்டளையிட்டார்.

பின்னணி

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பரப்புரையின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணிஇ தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிட்டது.

அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட்ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார்.

அத்துடன் அந்தக் காலப்பகுதியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் தன்னை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜூவன் கூல் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்