இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவு – சிறிலங்கா அதிபர் கவலை

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா இராணுவ கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவைத் திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்கு குறித்து கவலை எழுப்ப வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, விசாரிக்க ஐ.நா பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட, நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூகாவின் நடவடிக்கைகள், லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அனுப்பும் விடயத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்றும் சிறிலங்கா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுமத்திய சில குற்றச்சாட்டுகள், குறித்த அதிகாரியைத் திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவுக்கு வழிவகுத்திருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு, எமது மனித உரிமை ஆணைக்குழு அவ்வாறு செய்திருந்தால் அது துயரமானது என்று சிறிலங்கா அதிபர் கருத்து வெளியிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்