இடைக்காலத் தடைக்கு எதிராக நாளை உச்சநீதிமன்றில் முறையீடு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா பிரதமராகச் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது தீர்ப்பளிக்கப்படும் வரையில், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டிருந்தது.

இதனால், மகிந்த ராஜபக்சவும், ஏனைய அமைச்சர்களும் பதவியிழந்ததாக கருதப்படுகின்றன.

இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அடுத்த 24 மணிநேரத்துக்குள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை மனுத்தாக்கல் செய்யவிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைகளின் செயற்பாட்டை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவில் நாங்கள் உடன்படவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு வெளியாகிய பின்னர், அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று, சட்ட நிபுணர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்