இலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா!

தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.
இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

நாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.
இந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.
சிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
தற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.
எனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.
எமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.
தேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்