தாமதமின்றி தீர்ப்பை அளிக்குமாறு கோருகிறார் மைத்திரி

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரிடம் கோரவுள்ளார்.

சட்டமா அதிபரின் ஊடாக, சிறிலங்கா அதிபர் இந்தக் கோரிக்கையை இன்று தலைமை நீதியரசர் நளின் பெரேராவிடம் முன்வைக்கவுள்ளார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்கா அதிபர் நேற்று நடத்திய கூட்டத்தின் போதே, தனது இந்த முடிவை சிறிலங்கா அதிபர் வெளிப்படுத்தினார் எனவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

“எதிர்வரும் 14ஆம் நாளுக்கு முன்னதாக, இந்த தீர்ப்பை வழங்குமாறு தலைமை நீதியரசரிடம் கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறினார்.

ஒட்டு மொத்த நாடுமே இந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் 14ஆம் நாளில் இருந்து நீதிமன்ற விடுமுறைக்காலம் ஆரம்பமாகிறது.

எனவே, அதற்கு முன்னதாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்