பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்!- அனந்தி சந்தேகம்

வடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

எனவே, படையினர் வெளியேறியுள்ள இடங்களில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மன்னார் மனித புதைகுழியிலிருந்து கடந்த வாரம் இரும்பு கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து எமது மக்கள் எவ்வளவு கோரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகிறது.

இந்த மனித எச்சங்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற நிலையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த புதைகுழி தொடர்பான மர்மங்கள் வெளிவருவதன் ஊடாக பல உண்மைகள் வெளிவரும் வாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்