பிரான்சில் எழுச்சியடைந்த கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28.01.2019) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர்களின் திரு உருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று இத்தாவில் பளைப்; பகுதியில் சிறீலங்காப் படையினருடனான நேரடிமோதலி;ல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்ரினன்ட் காண்டீபன் அவர்களின் சகோதரியும், 25.07.2008 அன்று பாளைமோட்டைப் பகுதியில் சிறீலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் ராணிமைந்தன் அவர்களின் சகோதரியும் 19.09.1996 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 லெப்டினன்ட் தாமரை அவர்களின் சகோதரியும் 09.01.1997 அன்று பரந்தன் ஆனையிறவுப் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கப்டன் சுபா நந்தினி அவர்களின் சகோதரி ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக கரோக்கி இசையுடன் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள். தமிழ்ச் சோலை மாணவிகளின் விடுதலைப் பாடல்களுக்கான நடனங்களும், கேணல் கிட்டு நினைவு சுமந்த கவிதைகளும் இடம்பெற்றன. கரோக்கி இசைப்பாடல்களை புளோமினில் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்களும் தமிழர்கலைபண்பாட்டுக்கழக பாடகரும் பாடியிருந்தனர்.
நடனங்களை புளோமினில் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை, பொபினி தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவர்கள் நடாத்தியிருந்தனர்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள், கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளை நினைவு கூந்த அதேவேளை 2009 அன்று இதேநாளிலே தாயகத்தில் எமது மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டார்கள், அப்போது சர்வதேசத்திடமும் சிங்கள தேசத்திடமும் எமது அழுதுபுரண்டு எமது வேதனையைக் கொட்டினோம். ஆனால் ஐரோப்பிய தேசமோ அமெரிக்க ஏகாதிபத்தியமோ காதில் வாங்கிக்கொள்ளவில்லை. உலகத்திலே எங்களுக்காகக் குரல்கொடுக்கவும் கைகொடுக்கவும் அயல் நாட்டிலே ஓர் இனம் இருக்கின்றது. அந்த இனத்தினுடைய ஆதரவையும் நீதியையும் கோரி அந்த மண்ணிலே தன்னை தீயில் ஆகுதியாக்;கிய வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களுடைய 10 ஆவது ஆண்டும் இன்றைய தினமே (29) என்பதையும் நினைவுகூர்ந்தார். மாவீரர்;களின் கனவுகளை இலட்சியங்களை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றக் கடைமைப்பட்டுள்ளோம் எனவும் உணர்த்தியதாக அவருடைய சிறப்புரை தொடர்ந்த அதேவேளை, மார்ச் மாதம் 4 ஆம் நாள் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் படல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு கண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்